நாட்டு மக்களுக்கு வினைத்திறன் மிக்க அரச சேவையை வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் திட்டத்தினை நிறைவேற்ற சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இப்புதுவருடத்தில் உறுதிபூன வேண்டும் என சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் கேட்டுக் கொண்டார்.
சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 2020ம் ஆண்டின் முதல்நாள் கடமைகளை மேற்கொள்ளும முகமாக சத்திய பிரமாணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (01) செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
எமது பிரதேச செயலகத்திற்கு சேவை பெற வரும் பொதுமக்களுக்கு உத்தியோகத்தர்கள் இன்முகத்துடன் நேர தாமதமின்றி அவர்களுக்கான சேவைகளை வழங்க நாம் பழகிக்கொள்ள வேண்டும்.
காரியாலய கடமைகளின் போது உத்தியோகத்தர்கள் அலட்சியப் போக்கில் செயற்படுவது, கையாடல் செயற்பாடுகளில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்காக ஜனாதிபதியினால் விஷேட குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் அரச காரியாலங்களுக்கு திடீர் விஜயங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை பொறுப்புடன் மேற்கொள்ளுதல் வேண்டும்.
நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவும் அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என ஜனாதிபதி நம்புகிறார். அந்த நம்பிக்கையினை நாம் பாதுகாத்து வினைத்திறன் மிக்கதும், விரைவானதுமான அரச சேவையினை பொதுமக்களுக்கு வழங்க சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தயாராக இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு சேவையினை நிமித்தம் வரும் பொதுமக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து உத்தியோகத்தர்களுக்கு எதிராக எந்த முறைப்பாடும் பெரிதாக இல்லை. இவ்வாறான செயற்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.