ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் எண்ணக்கருவில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மகளிர் பிரிவு பாடசாலையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 'விழுமிய தின' நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (24) வெகு சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் முகைதீன் முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களில் தாக்கம் செலுத்தும் சவால்கள் பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் எம்.எம்.நவாஸ், அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி முதல்வர் எம்.ஏ.எம்.நவாஸ், மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிஅதிபர் எம்.எம்.ஹஸீப், ஆசியா பவுண்டேஷன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உள்ளிட்டோரும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் விழுமிய சத்தியப்பிரமாணம் கூட்டாக இடம்பெற்றதுடன் பாடசாலைக்கான சுகாதாரக் கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, அதில் அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்ட 30 மாணவிகளுக்கு பிரதம அதிதியினால் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலையின் அவசரத் தேவைகள் அடங்கிய கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலை அதிபரினால் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதேவேளை ஆசியா பவுண்டேஷன் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட மாணவர்களுக்கான ஒழுக்க விழுமிய வழிகாட்டல் நூல்கள் அதன் நிபுணத்துவ ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதினால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.