காரைதீவு குறூப் சகா-
பட்டப்பகலில் கடமை நேரத்தில் பகிரங்கமாக ஒரு பெண் ஒரு அயோக்கியனால் பொன்னைத்தனமாக தாக்கப்பட்டிருக்கிறாள். ஏனையோர் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறாள். 5நாட்களாகியும் இன்னும் அவன் கைதுசெய்யப்படாதது ஏன்? அக்கயவனைக் கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும்.
இவ்வாறு தமிழத்தேசியக்கூட்டமைப்பின் காரைதீவுப் பிரதேசபையின் ஒரேயொரு பெண் உறுப்பினரான திருமதி சின்னையா ஜெயராணி வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நிந்தவூரில் ஒரு பெண்ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையடுத்து அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
ஜ.நா.சாசனத்தின்படி மனிதஉரிமைகளை அங்கீகரித்துள்ள ஒரு நாட்டில் ஒரு பெண்ணுக்கு அதுவும் கடமைநேரத்தில் பட்டப்பகலில் ஏனையோர் பார்த்திருக்க ஒருவன் கன்னத்தில் அறைந்துள்ளான் என்பது சிறிய விடயமா?
பெண்ணுரிமைகள் தொடர்பாக மகளிர்தினத்திலும் மேடைகளிலும் முழங்கும் மார்தட்டும் அமைப்புகள் எங்கே? மகளிர் ஆர்வலர்கள் எங்கே? சமஉரிமை உரிமைப்பங்கீடு கேட்கும் தலைவிகள் எங்கே? தாக்கப்பட்டவள் ஒரு தமிழ்ப்பெண் என்பதால் இந்த பாரபட்சமா?
இந்தியாவில் இச்சம்பவம் இடம்பெற்றிருந்தால் அப்பிரதேசமே தீப்பற்றி எரிந்திருக்கும். முழு நாடே அல்லோககல்லோலப்பட்டிருக்கும். என்கவுண்டர் நடாத்திய வரலாறும் அங்குண்டு.
ஆனாலிங்கே ஒரு சிலர் குரல்கொடுக்கிறார்கள். ஏனையோர் மௌனிhயகவிருக்கின்றனர்.தேர்தல் வந்தால் வருவார்கள். பெண்ணுரிமைபற்றி பேசுவார்கள். இனியும் பொறுமைகாக்கமுடியாது.
ஒரு நாள் அவகாசம்முள்ளது. அதற்குள் அவர் கைதுசெய்யப்படவேண்டும். இன்றேல் எமது போராட்டம் வெடிக்கும் என்றார்.