ரவூப் ஹக்கீம் தலைவராக வந்த பிற்பாடு ஒலுவிலில் பேசிய முதலாவது கூட்டத்தில் தலைவர் அஷ்ரப் எங்களுக்கு ஒரு கச்சை துண்டை தந்து விட்டு போய் இருக்கிறார், அதை வைத்து நிர்வாணத்தை மறைப்பதா, அதை தலை பாகையாக அணிவதா? என்றல்லவா கேள்வி எழுப்பினார்.அந்த இடம்தான் அதாவுல்லா பிரிவதற்கு காரணமாக அமைந்தது. தலைவர் கச்சை துண்டோடு எம்மை விட்டு செல்லவில்லை, மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த முஸ்லிம்களுக்கு உள்ளாடை மேலாடை வெளியாடை, ரை, கோர்ட், தலை பாகை எல்லாமே கட்டி விட்டுதான் சென்றார், கச்சை துண்டு தந்தவராக நீ அவரை சொல்ல கூடாது.என்று அதற்கான பதிலை அட்டாளைச்சேனையில் கொடுத்து விட்டுதான் நாங்கள் வெளியேறினோம். என தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.
எழுத்தாளர் எம். எச். எம். இப்றாஹிம் எழுதிய நான் எய்த அம்புகள் நூல் வெளியீட்டு விழா சாய்ந்தமருது லீமேரிடியன் வரவேற்பு மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
முஸ்லிம்கள் இன வன் செயல்களுக்கு பலி கடாக்கள் ஆக்கப்பட்டனர். அளுத்கமவிலும், திகனவிலும் நடந்தேறிய கொடூரங்களை நாம் அறிவோம். முஸ்லிம்கள் பயங்கரவாதிகளக முத்திரை குத்தப்பட்டனர்.. இவற்றுக்கான காரணம் பெருந்தலைவர் அஷ்ரப்பின் குரலுக்கு மாறாக நடந்ததுவேதான். நான் சுத்தமான முஸ்லிம் காங்கிரஸ்காரன்தான். அதாவுல்லா இல்லாத முஸ்லிம் காங்கிரஸா? ஆனால் அதில் உள்ள விடயம் என்னவென்றால் நான் அஷ்ரப்பின் முஸ்லிம் காங்கிரஸ்காரன். அடுத்த தலைமைத்துவத்தை கண்டு கொண்டு விட்டேன், இனி ஒரு இரவுக்குள் மரணித்தாலும் பரவாயில்லை என்று பெருந்தலைவர் அஷ்ரப் பேசியதை நேரில் செவிமடுத்தவர்களும் இங்கு உள்ளனர். அதற்காக அவருடன் பிடித்த, எடுத்த புகைப்படங்களை காட்டி அரசியல் செய்பவன் நான் அல்லன்.
எங்களுக்குள் பிரதேசவாதம் இருக்கவில்லை. எங்களில் ஒருவன் பிரதேசவாதத்துக்கு அப்பால் மக்கள் அனைவரையும் அழைத்து செல்வான் என்றே நம்பி இருந்தோம். தலைவரின் கொள்கைகளைத்தான் அந்த தலைமைத்துவத்திடம் இருந்து ஆழமாக எதிர்பார்த்தோம். மாறாக படத்தையும், பாட்டையும் அல்ல. கல்முனையில் மஹிந்தவை அமைச்சராக கொண்டு வந்து கூட்டம் நடத்திய பிற்பாடு நாட்டின் அடுத்த தலைவராக மஹிந்தவேதான் இருக்க முடியும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னவர் பெருந்தலைவர் அஷ்ரப் . ஆனால் இன்னார், இன்னார் என்று ஆட்களை தேசிய அரசியலில் புரிந்து கொள்ளாமல் எமது மக்களை பிழையாக வழி நடத்துகின்ற தவறை செய்தவர்தான் ஹக்கீம்.
ஒரு தலைவனை உருவாக்கி அவனோடு பயணிக்க நாம் நினைத்தோம். அது முடியவே முடியாத காரியம் என்று கண்டு உணர்ந்தோம். அங்கு இருந்திருந்தால் பதவிகளை மிக இலகுவாக பெற்று கொண்டு காலுக்கு மேல் கால் போட்டு கொண்டு இருந்திருக்க முடியும். ஆனால் சமூகத்தின் தேவைகளை உணர்ந்தவர்களாக பதவிகளை விட்டெறிந்து அஷ்ரபின் போராளிகளாக வெளியேறி வந்தோம். அரசியலில் மக்களை சரியாக, உண்மையாக, நேர்மையாக வழிகாட்டினோம். சொன்னதை செய்தோம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதை தவறாக யாரும் அரைகுறையாக பேச கூடாது. முஸ்லிம் சமூகத்தை அரசியல் மயப்படுத்தவே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் அதை செய்தார்.
தமிழர்களும் அதைதான் நம் கண் முன்னே செய்தனர். நாம் சிறுபான்மையினராக ஒரு அமைப்பிலே வாழ்ந்து வந்தோம். அதில் இருந்து விலகியவர்களாக, முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்தவே அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை முதலில் ஆரம்பித்தார். அதில் வர போகிற பிரச்சினைகள், சிக்கல்கள் ஆகியவற்றை உணர்ந்தபோதே இறுதி காலங்களில் தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் அரசியலை முன்னெடுத்து கொண்டு போனார். தமிழர்கள், சிங்களவர் ஏன்று ஏராளமோனோர் வந்து இணைந்தவர். அவர்களில் இன்றைய விமலவீர திஸநாயக்க எம். பியும் ஒருவர். வடக்கு, கிழக்குக்கு வெளியில் இருந்துவந்தும் இணைந்தார்கள். நாட்டு மக்கள் அனைவருமே அஷ்ரப்பை நோக்கி வந்தனர். அவ்வாறான சூழலில்தான் நமது தலைவர் மரணித்தார்.
அவர் ஏற்கனவே சரியாகத்தான் வழிகாட்டி போயிருந்தார். ரவூப் ஹக்கீம் தலைவராக வந்த பிற்பாடு ஒலுவிலில் பேசிய முதலாவது கூட்டத்தில் தலைவர் அஷ்ரப் எங்களுக்கு ஒரு கச்சை துண்டை தந்து விட்டு போய் இருக்கிறார், அதை வைத்து நிர்வாணத்தை மறைப்பதா, அதை தலை பாகையாக அணிவதா? என்றல்லவா கேள்வி எழுப்பினார்.அந்த இடம்தான் அதாவுல்லா பிரிவதற்கு காரணமாக அமைந்தது. தலைவர் கச்சை துண்டோடு எம்மை விட்டு செல்லவில்லை, மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த முஸ்லிம்களுக்கு உள்ளாடை மேலாடை வெளியாடை, ரை, கோர்ட், தலை பாகை எல்லாமே கட்டி விட்டுதான் சென்றார், கச்சை துண்டு தந்தவராக நீ அவரை சொல்ல கூடாது.என்று அதற்கான பதிலை அட்டாளைச்சேனையில் கொடுத்து விட்டுதான் நாங்கள் வெளியேறினோம். கிழக்கு முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் பயணிப்பதே நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்
நாங்கள் அல்லாவையும், அவரின் திருத்தூதரையும் மிக இறுக்கமாக நம்புபவர்கள். நாம் வேறு யாரையும் அல்லாஹ்வாக பார்க்கின்றவர்களாக இருக்க முடியாது. ஆனால் திருத்தூதர் காட்டிய வழிகள் இருக்கின்றன. ஒப்பந்தங்களில் எவ்வாறு நடந்து கொள்வது? மற்றைய மார்க்கங்களை எப்படி மதிப்பது? பிற அரசர்களை எவ்வாறு சந்தித்து கௌரவிப்பது?, மக்காவை அவர் எவ்வாறு வெற்றி கொண்டார், அங்கிருந்து எவ்வாறு மதினாவுக்கு சென்றார்? என்றெல்லாம் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். நன்றி என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமானது. நன்றி உள்ளவர்களாக நாங்கள் இருப்பதை பார்த்து அல்லாஹ்வாக நினைக்கிறோம் என்று சொல்ல கூடாது. வாழ முடியாமல் பல்லாண்டு காலமாக துன்ப சாகரத்துக்குள் மூழ்கி இருந்த முஸ்லிம்களுக்கு விடுதலையை பெற்று கொடுத்தவர் மீது நன்றி உள்ளவர்களாக நிச்சயம் இருக்கத்தான் வேண்டும்.
முஸ்லிம் சமூகத்துக்கு விடுதலையை பெற்று கொடுக்கவே நாம் அஷ்ரப்புடன் ஒன்றாக நின்று இணைந்து பயணித்தோம். அவரிடம் கொள்கை இருந்தது. மக்கள் குறித்த நம்பிக்கை இருந்தது. அந்த மனிதனின் கொள்கைக்காகவே நாம் அவருடன் வாழ்ந்து, பயணித்து, அரசியல் செய்தோம். அவரை மெச்சினோம். அவருக்கு பலம் கொடுத்து, அவரை பெருந்தலைவர் ஆக்கி இந்நாட்டின் ஆட்சியாளர்களைக்கூட மாற்றி காட்டினோம். 12 வீத வெட்டு புள்ளியை 05 வீத வெட்டு புள்ளியாக அவர் கொண்டு வந்தார். அவர் அன்று அதை கொண்டு வந்தபோது மு. காவை வைத்து அரசியல் செய்வதாகதான் இருந்தது. ஆனால் அவர் வாழ்ந்தபோதிலும் சரி, மு. கா வாழ்கின்ற இந்த கணம் வரையிலும் சரி அந்த வெட்டு புள்ளி குறைப்பு மூலமாக ஒரு ஆசனத்தைத்தானும் மு. கா வெல்லவே இல்லை. தலைவர் மரணித்த காலத்தில் கண்டியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ரவூப் ஹக்கீம் அங்கு வெற்றி பெற்றார் அல்லவா? தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் ரவூப் ஹக்கீம் என்பவர் இன்று அரசியல் அரங்கில் இருந்திருக்கவே மாட்டார்.பல உயிர்களின் தியாகத்தில்தான் அவருக்கு அந்த பாராளுமன்ற பதவி கிடைத்ததே ஒழிய வெட்டு புள்ளி குறைப்பு மூலமாக அல்ல.
நான் பணத்துக்காக அரசியல் செய்யவில்லை. மக்களை காட்டி கொடுக்கின்ற அரசியல் செய்யவில்லை. மக்களுக்கான அரசியலை தன்னந்தனியாக நின்று செய்து இருக்கின்றேன். அதுவே எனது வெற்றி. நான் பேசிய பேச்சுகள், கருத்துகள் அன்று போல் என்றும் உண்மையானவையாகவே உள்ளன. மஹிந்த நாட்டுக்கும், வடக்கு, கிழக்கு மக்களுக்கும் செய்த நன்மைகளை நாம் பேசினோம். ஆனால் சிலர் ரணில், சஜித் போல உண்மையான முஸ்லிம்கள் இல்லை என்பது போல பேசினார்கள். மஹிந்தவுக்கு வாக்களிப்பவர்கள் காபிர்கள் என்றும் சஜித்துக்கு வாக்களிப்பவர்கள் முஸ்லிம்கள் என்றும் பேசினார்கள். ஆனால் சதிகாரர்களுக்கு எல்லாம் சதிகாரன் அல்லா. அவனே அனைத்தையும் தீர்மானிப்பவன். ஐக்கிய தேசிய கட்சியும், பிரேமதாஸவும் இவ்வாறு படுதோல்வி அடைவார்கள் என்று நினைத்தே இருக்கவில்லை. ராஜபக்ஸக்கள் மகத்தான வெற்றி அடைவார்கள் என்றும் யாரும் நினைத்திருக்கவில்லை. சஜித் ஒரு வேளை வென்று இருந்தால் கிழக்கு மாகாணம் அமெரிக்காவுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டு இருக்கும்.
முஸ்லிம் சட்டத்தை நீக்குவதற்கு எதிராக இப்போது கூக்குரல் போடுகின்றனர். ஆனால் ஹக்கீம் போன்றோர் திருமண வயதை 18 ஆக கொண்டு வர வேண்டும் என்று அப்போது சொன்னார்கள். நான் ஒருவன் மாத்திரம் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு அன்றைய சூழல் பொருத்தமானது அல்ல என்று குரல் கொடுத்து சட்ட வல்லுனர்களுக்கு எனது அந்த செய்தியை அனுப்பி இருந்தேன். எல்லாவற்றையும் மொத்தமாக தூக்கி கொடுத்து விட்டு இன்று சத்தம் போடுகின்றார்கள். ஒரு எம். பியால் பிரேரணைதான் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. அவர்களே அந்த விடயங்களை பார்த்து கொள்ளட்டும்.
நாட்டில் பல தேவைகள் உள்ளன.பெரும்பான்மை மக்கள் எல்லோருடனும் ஒற்றுமையாக நாம் வாழ வேண்டி இருக்கின்றது. தலைவர் அஷ்ரப் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் பாலமாக இருப்பதற்கு சிந்தித்தார். ஆனால் இன்று சிங்கள - முஸ்ல்ம் மக்களுக்கு இடையிலான பாலம் ஒன்றை நாம் தேடி திரிகிறோம். தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான பாலமாக முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று அஷ்ர சொல்லி விட்டு போக சிங்கள மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலும், , தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலும் பெரிய பாலங்களை தேட வேண்டி எமக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
மூன்றில் ஒரு பகுதி முஸ்லிம்கள் கிழக்கில் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பகுதி முஸ்லிம்கள் கிழக்குக்கு வெளியில் அதிலும் குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் வாழ்கின்றனர், அதுவும் ஐதாக வாழ்கின்றனர், ஆகவேதான் சமஷ்டி போன்ற தீர்வு வேண்டாம் என்று நாம் கூறுகின்றோம். வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்கின்ற முஸ்லிம்களை காப்பாற்றுவதற்காகத்தான் அவ்வாறு கூறுகின்றோம். ஆனால் அவர்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க முடியாது. கிழக்குதான் அவர்களுக்குமாக குரல் கொடுக்க கூடிய தளம் ஆகும். அவர்கள் முன்பு போல வேறு வேறுபட்ட பெரிய கட்சிகளில் இப்போதும் பயணிக்க முடியும். ஆனால் கிழக்கு மக்கள் எப்போதும் ஒரு அணியில் ஒரு நிலையில்தான் நிற்க வேண்டும். என்கிறோம். ஊருக்கு ஒரு கட்சி தேவையே இல்லை.என்றார்