கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் சுகுணனின் அதிரடிநடவடிக்கை.
காரைதீவு நிருபர் சகா-கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின்கீழ் காரைதீவில் அதிரடியாக டெங்கு வேட்டை இடம்பெற்றது. நேற்று(18) இடம்பெற்ற இவ்வேட்டையில் பலர் சிக்கினர். பாதிக்க்ப்பட்ட பகுதிக்கு உடனடியாக புகை விசிறப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணனின் அதிரடிநடவடிக்கையால் மக்கள் அதிர்ந்துபோனார்கள்.
தொற்று நோய்களுக்கான பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் ஆரிப் தலைமையிலும் காரைதீவுக்கான பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஒத்துழைப்புடனும் சுமார் 100 அதிகாரிகள் பங்குகொண்டு கிட்டத்தட்ட 1500 வீடுகள் அதிரடியாகப் பரிசீலிக்கப்பட்டன. பலவீடுகள் துப்பரவு செய்யப்பட்டன.
இதன்போது ஏடிஸ் வகை டெங்கு நுளம்புகளை பதுக்கி வைத்திருந்த 4 வீடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் நுளம்பு பெருகுவதற்கு ஏது நிலையை வைத்திருந்த 350 வீடுகளுக்கு எதிராக சிவப்பு பத்திரம் வழங்கப்பட்டு ஒருநாள் காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய வீடுகள் டெங்கு அபாயம் அற்ற இடங்களாக சுத்தப்படுத்தப்பட்டது.
முன்னதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு போதுமான அறிழவித்தல் வழங்கப்பட்டு இத்தேடுதல் வேட்டை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பணிப்பாளர் டாக்டர் சுகுணன் கூறுகையில்: நாங்கள் ஓய்வு நாட்களில் கூட தொடர்ந்து இரு மாதங்களாக தொடர்ச்சியாக வேலை செய்தும் பொதுமக்கள் பாராமுகமாக இருப்பது வேதனை அளித்த காலம் போய் இப்பொழுது அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்ற விடயத்தை இங்கு மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். சட்டநடவடிக்கை எனும்பொழுது உத்தியோகத்தர்கள் பணம் படைத்தவர்கள் செல்வாக்கு படைத்தோர் அரசியல்வாதிகள் என்று எதுவித வேறுபாடுகளும் இன்றி இறுக்கமாக நடவடிக்கைகள் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.என்றார்.