நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஒற்றுமையாக செயற்பட்டு எமது வாக்குபலத்தைக் காட்டியதுபோலவே எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் எமது வாக்குமூலத்தை நிரூபிப்போம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையின் ஊடாக அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சி யை தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்வோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய முன்னணி அமைப்பாளர்களினதும் தொழிலாளர் தேசிய சங்கத்தினது முழுநேர உத்தியோகத்தரினதும் மீளாய்வுக் கூட்டம் ஹட்டனில் ( 20/12) நடைபெற்றது. தேசிய அமைப்பாளர் ஜி.நகுலேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஶ்ரீ தரன், நிர்வாக செயலாளர் வீரப்பன், நிர்வாக இயக்குனர் நந்த குமார், உபதலைவர் ராம் முத்தையா இளைஞரணி தலைவர் பா.சிவனேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விளக்கவுரை ஆற்றியபோதே முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
தொழிலாளர் தேசிய சங்கத்தின் 54 வருட கால வரலாற்றில் நான்கு வருடகாலம் மாத்திரமே அமைச்சுப்பதவியை கொண்டிருந்தது. எஞ்சிய 50 வருட காலமும் அரசாங்கத்தின் பட்டம் பதவிகளை நம்பிய இயக்கம் அதுவல்ல. மக்கள் பலமே அதன் பலமாகும். அதனால்தான் ஆயிரம் சிரமங்கள் வந்தபோதும். அமைப்பு அரை நூற்றாண்டு காலம் கடந்தும் துடிப்புடன் செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் அமைச்சுப் பதவியைக் கொண்டிருந்த காலத்தில் அபிவிருத்தி விடயத்தில் பல முற்போக்கான விடயங்களைச் செய்து காட்டி இருந்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் நாம் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை அடுத்து வரும் ஆறு மாதங்கள் முழுவதுமாக மக்களிடம் கையளிக்க முடியும். பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைத்தபோதும் நாம் ஓய்ந்திருக்கவில்லை. பல பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். கடந்த வாரமும் நான் பாராளுமன்றம் சென்று சுகாதார மேற்பார்வைக்குழுவை கூட்டு தோட்ட சுகாதார முறையை அரச முறைமயாக்கும் இறுதி அறிக்கையைத் தயார் செய்திருக்கின்றேன்.
முன்னாள் அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் பல அபிவிருத்திப் பணிகளை மக்கள் வசம் கையளித்து வருகின்றனர். இந்தவாரம் முதல் நானும் எனது முன்னெடுப்பில் மேற்கொண்ட பணிகளை மக்களிடம் கையளிக்கவுள்ளேன்.தலைவர் மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக கடந்த காலத்தில் ஒற்றுமையாக செயற்பட்டு பல அபிவிருத்தித் திட்டங்களையும் உரிமைசார் ஏற்பாடுகளையும் நாம் பெற்றுக்கொடுத்முள்ளோம்.அதனை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் பிரதிபலித்தன. அதேபோல எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் எமது வெற்றித் தொடரும். அமைப்பாளர்கள், முழுநேர உத்தியோகத்தர்கள், இளைஞரணியினர் , மாதர் அணியினர் அதே உத்வேகத்துடன் செயற்பட்டு எமது பலத்தை நிரூபிப்போம் எனவும் தெரிவித்தார்.