நாட்டில் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையக பகுதியிலும் சீரற்ற வானிலை நிலவிவருகிறது.குறித்த சீரற்ற காலநிலையினை நேற்று (19) இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இந்த தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன.பதுளை கொழும்பு புகையிரத வீதியில் இன்று காலை 11.45 மணியளவில் எல்ல நுழைவாயில் புகையிரத சுரங்க வழி பாதைக்கு சமீபமாக மண் சரிவு ஏற்பட்டதன் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் தடைப்பட்டன.
இதனால் புகையிரத சேவைகள் வழமைக்கு மாறாக சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தாமதித்து நடைபெற்றன.
இதனால் புகையிரத பயணிகள் மிகவும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இதே வேளை பஸ்ஸரை நகர் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.இதில் உயிர் ஆபத்துக்கள் ஏதுவும் ஏற்படாத போதிலும் வீட்டிலுள்ள உடைமைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
இதே வேளை நீர் போசன பிரதசங்களில் அதிக மழை வீழ்ச்சி கிடைத்து வருவதனால் காசல்ரி ,கெனியோன்,விமரசுரேநதிர,லக்ஸபான,நவலக்ஷபான ,மவுசாகலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றன.
இதனால் எந்த நேரத்திலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்பதால் நீர்த் தேக்கங்களுக்கு கீழ் தாழ்நிலப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு மின்சாரசபை அதிகாரிகள் பொது மக்களுடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையுடன் கடும் குளிர் கடும் பனி நிலவி வருவதனால் மலையக வீதிகளை பயனபடுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் பனி மற்றும் மழை பெய்யும் போது தங்களுக்கு உரிய பக்கத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடச்சியாக இடை விடாது மழை பெய்து வருவதனால் நகர் பகுதியில் சன நடமாற்றம் மிகவும குறைவாக காணப்படுகின்றன.இதனால் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மலையகப் பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளன.இதனால் தேயிலை உற்பத்தியும் வீழச்சி கண்டுள்ளன.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் மலைகளுக்கு சமீபமாகவும்,மண் திட்டுகளுக்கு கீழ் பகுதியிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலைய பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளன.
தோடர் மழை காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களது கால்நடைகளுக்கு புற்களை அறுக்க முடியாது பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.