தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான பொது நூலகங்களின் பாதுகாப்பு பேணல் தொடர்பான ஆய்வுப் போட்டியில் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பொது நூலகம் கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
இதற்காக கிடைக்கப்பெற்ற சான்றிதழ் மற்றும் விருது என்பவற்றை சாய்ந்தமருது நூலகர் ஏ.சி.அன்வர் சதாத், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்தார். கல்முனை மாநகர சபையின் முதல்வர் செயலக கேப்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸும் பங்கேற்றிருந்தார்.
இவ்விருதானது கல்முனை மாநகர சபைக்கும் சாய்ந்தமருது மண்ணுக்கும் பெருமையைத் தேடித்தந்திருப்பதாக இதன்போது மகிழ்ச்சி தெரிவித்த மாநகர முதல்வர் றகீப் அவர்கள், இதற்காக இந்நூலகத்தில் சிறப்பாக பணியாற்றி வருகின்ற நூலகர், உதவி நூலகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாநகர சபையின் சார்பில் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகங்களில் நிலவி வருகின்ற குறைபாடுகள் மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.