சகல ஆட்சி காலத்திலும் கைத்தொழில் துறை பற்றிய கவனம் குறைவாக காணப்பட்டதாகவும், கடந்த காலங்களில் கைத்தொழில்துறை அமைச்சர்களாக இருந்தவர்கள், இதுவரையில் நடாத்தி வந்த கைத்தொழில்கள் நஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டு, பின்னர் கைதொழில்களை விற்பனை செய்து அதன் கமிஷன்களால் தங்கள் பைகளை நிரப்பிக் கொண்டுள்ளனர் என சிறிய மற்றும் நடுத்தர அளவிலான
தொழில்தறை மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச கூறினார்.
.
அமைச்சர் இவ்வாறு கடந்த (6) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்ட தேசிய கைத்தறி புடவை கைத்தொழில் கண்காட்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோது கூறினார்.
கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் புடவைக் கைத்தொழில் திணைக்களம் 1990 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த கண்காட்சி மற்றும் விருது வழங்கும் விழாவை ஒழுங்கு செய்துள்ளதோடு, தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு விருது மற்றும் பணப்பரிசுகள் இந் நிகழ்வின்போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களும், கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திரு.ஜே.ஏ. ரஞ்ஜித் அவர்களும் கலந்து கொண்டனர்.







