பெண் மருத்துவர் கூட்டு பாலியல் எரித்துக்கொலை குற்றவாளிகள் நால்வர் இன்று காலை சுட்டுக்கொலை -விபரம்

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும், காவல்துறையினர் சுட்டு கொன்றுள்ள நிலையில் சைபராபாத் போலீஸ் ஆணையர் வி.சி. சஜநார் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார்,

இந்த ஹைதராபாத் கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவம் இந்திய மக்களிடம் பெருங்கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரையும், சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று, நடந்தவற்றை கூறும்படி காவல்துறையினர் கேட்டதாகவும், அப்போது அவர்கள் தப்பி செல்ல முயன்றபோது சுட்டு கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஹைதராபாத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மெஹபூப் நகர் மாவட்டத்திலுள்ள சத்தன்பல்லியில் என்னும் கிராமத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

இந்த என்கவுன்டரை நடத்திய வி.சி. சஜநாருக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதனை கண்டித்து வருகின்றனர்.

இன்றைய ஆந்திர பிரதேசமும், தெலங்கானாவும் ஒருங்கிணைந்து இருந்த அப்போதைய ஆந்திர பிரதேச மாநிலத்தில் 11 ஆண்டுகளுக்கு முன்னால் வாரங்கலில் வி.சி.சஜநார் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தபோது இதுபோன்றதொரு என்கவுன்டர் நடைபெற்றது.

வரங்கலிலும், வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாத்திலும் நடைபெற்ற இரண்டு என்கவுன்டர்களிலும் வி.சி.சஜநார் மிக முக்கிய பங்காற்றியுள்ளார்.

வரங்கலில் நடைபெற்றது என்ன?

2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நிகழ்ந்த அமில வீச்சில், கிட்ஸ் கல்லூரியை சேர்ந்த பி.டெக் மாணவிகள் ஸ்வெப்னிகாவும், பிரனீதாவும் மிகவும் மோசமாக காயமடைந்தனர்.

ஸ்வெப்னிகாவின் வகுப்பு தோழர் வெளிப்படுத்திய காதலை ஸ்வெப்னிகா மறுத்துவிட்டதால் இந்த ஆசிட் வீச்சு நடத்தப்பட்டது.

இந்த கொடூரமான தாக்குதலில் பிரனீதா கடும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்வெப்னிகா, சிகிச்சை பயனின்றி இறந்தார்.

இந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்நேரத்தில் வாரங்கலில் போலீஸ் சூப்பிரண்டாக வி.சி.சஜநார் பணியாற்றி வந்தார்.

இந்த பெண்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியதில் 3 ஆண்கள் ஈடுபட்டதாக காவல்துறையினர் அடையாளம் கண்டனர்.

அமில வீச்சு நடைபெற்று மூன்று நாட்களுக்கு பிறகு, விசாரணையின் ஒரு பகுதியாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகாமூரி சீனிவாஸ், பஜ்ஜூரி சஞ்சய் மற்றும் பொதராஜு ஹரிகிருஷ்ணா மூவரையும், குற்றத்தை எவ்வாறு செய்தார்கள் என்று செய்து காட்டும்படி சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரின் ஆயுதங்களை பிடுங்கி தாக்க முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த என்கவுன்டர் நடைபெற்ற பின்னர், காவல்துறையினரின் நடவடிக்கை பாராட்டப்பட்டது. சஜநாரும், அவரது குழுவினரும் உள்ளூர் மக்களால் பாராட்டப்பட்டனர்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -