–கலாநிதி ஜெமில்-
சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிமன்றம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உயர் சபைகளில் ஒன்றான கிழக்குமாகாண சபையில் தனிநபர் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி அதன் பிரதியை பள்ளிவாசல் தலைவரிடம் ஒப்படைத்தேன் ஆனால் மக்களை வீதிக்கு இறக்கி போராடி ஒன்பது உறுப்பினர்களை தாங்களது கைகளில் வைத்திருக்கும் தோடம்பழத்தால் இவ்வளவு காலத்துக்குள் சாய்ந்தமருதுக்கான சபை தொடர்பில் கல்முனை மாநகர சபையில் ஒரு பிரேரணையாவது நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போனது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த சிறிய உதாரணம் ஒன்றே இவர்கள், தாங்களது தனிப்பட்ட அரசியல் அஜந்தாக்களுக்காக ஊரையும் பள்ளிவாசலையும் மக்களையும் பயன்படுத்துகிறார்கள் என்பதை உணர முடியும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுக்கான தேர்தல் குழுவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமாதாசவை ஜனாதிபதியாக்கும் முஸ்லிம் காங்கிரஸின் வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது 19 ஆம் வட்டாரத்துக்கான கிளை அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர் தலைமையில் இடம்பெற்ற போது, இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களது உணர்வுகளை மூலதனமாகக்கொண்டு பதவிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இன்று முழுக்க முழுக்க சுயநலத்துக்காக தேவையற்ற முடிவுகளையெல்லாம் எடுத்துக்கொண்டு சாய்ந்தமருது மக்களை மிகுந்த சங்கடத்துக்குள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். இவர்களது திருகுதாளங்களை மக்கள் தற்போது நன்றாக உணரத்தொடங்கியுள்ளனர். இவர்களுடன் இருந்த புத்திஜீவிகள் இவர்களை விட்டு அகன்றுவிட்டனர். இப்போது இங்கு சபைக்கான முன்னெடுப்புக்கள் எதுவுமில்லை தனிப்பட்ட அஜந்தாக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. முஸ்லிம் சமூகமே ஒருபக்கத்தில் நிற்கின்றபோது இவர்கள் பள்ளிவாசலின் பெயரால் ஊரைக் காட்டிக்கொடுக்கின்ற கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனைய ஊரவர்கள் சாய்ந்தமருதை எள்ளிநகையாடும் நிலையை இப்போது உருவாக்கியுள்ளனர்.
இனிமேலும் இவர்களது அராஜகங்களை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. மக்கள் ஆங்கங்கே வெகுண்டெள ஆரம்பித்துள்ளனர். மக்கள் இவர்களது சுயரூபத்தை உணரத்தொடங்கியுள்ளனர். குறுகிய சுயலாபங்களுக்காக, சிறுபான்மையினரை ஒரு பொருட்டாகவே கருதாத ஒருவரை ஜனாதிபதியாக்க பகல்கனவு காண்கின்றனர் இவர்கள் விடயத்தில் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.
பெரும்பான்மை முஸ்லிம்கள் வெறுக்கின்ற ஒருவருக்கு நமது ஊரை அடகுவைக்க பார்க்கின்றனர். கோட்டபாய சிறுபான்மையினர் மீது எவ்வாறான பார்வையில் உள்ளார் என்பதையும் அவரது அணியில் எவ்வாறானவர்கள் உள்ளார்கள் என்பதனையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறே மக்கள் வாக்களிப்பர் தமிழ் பிரதேசத்தில் ஒன்றையும் முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றையும் கூறித்திரிவதை ஊடகங்களில் நன்கு பார்க்க முடிகிறது.
கருணா என்ன கூறுகிறார் வீரவன்ச என்ன கதைக்கிறார் ரத்னா தேரர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பதையெல்லாம் நாம் நன்கு உணர்ந்து நமது வாக்குகளை அளிக்க முற்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சஜித் பிரேமதாச அவர்களது வெற்றி என்பது நிச்சயமானது என்று தெரிவித்த கலாநிதி ஜெமில் அவரது வெற்றிக்காக நாங்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வின்போது முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.றஸ்ஸாக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.சி.யஹ்யாகான்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.இஸ்மாயில் றபீக் மாஸ்ட்டர் உட்பட பலரும் கலந்துகொண்டு கருத்துக்களை வெளியிட்டனர்.