சஜீத் பிரமதாசா ஏன் தோற்றுப்போனார் விளக்கம் கொடுத்திருக்கும் ரணில் விக்ரம சிங்க

டந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை சமூகமான சிங்கள பௌத்த மக்களின் வாக்குகள் கிடைக்காது போனதற்கான காரணத்தை கண்டறிந்து அவர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்வதாக அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிறேமதாசவிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என்று முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்காவின் தலைநகரமான ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பணியாற்றும் பணியாளர்கள் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆற்றிய சேவைக்காக நன்றி தெரிவிப்பதற்காக கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க அங்கு சென்றிருந்தார்.

எமது கட்சிக்கு சிங்கள, பௌத்த வாக்குகள் இல்லாமல் போனமை தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு எமது கட்சிக்கு நடந்ததில்லை. இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். அதனால் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஆராய்வது அவசியம். இதனை ஆராய்ந்து பார்த்தால் மாத்திரமே எம்மால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல முடியும். அது தொடர்பில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்து விடப்போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிறேமதாச வெற்றி பெறாது போனதற்கு கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும், அவருக்கு சார்பானவர்களுமே காரணமாக அமைந்ததாக சஜித் பிறேமதாசவும் அவரது விசுவாசிகளும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை நிராகரிக்கும் ரணில் விக்கிரமசிங்க சஜித்தின் தேர்தல் பணிகளுக்கு தான் ஒருபோதும் தடையாக இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அது மாத்திரமன்றி தேர்தல் பிரசாரப் பணிகளை சஜித் தலைமையிலான அணியினரே மேற்கொண்டதாகவும் அவர்கள் தனக்கு வழங்கிய பணியை தான் சரிவர நிறைவேற்றிக் கொடுத்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிகொத்தவும், அதன் பணியாளர்களும், கட்சி உறுப்பினர்களும் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி அவரை வெற்றிபெறச் செயவதற்காக எம்மாலான அனைத்தையும் மேற்கொண்டோம். அதற்கமைய சிறிகொத்தவும், எமது உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை என்னால் உறுதியாக கூறமுடியும்.

இந்த செயற்பாடுகளுக்கு நான் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக கூறப்படும் விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். அவ்வாறான எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

நான் வடக்கு கிழக்கு பிரதேசங்களை பொறுப்பேற்று அந்த பிரதேசங்களின் வாக்குகளின் விகிதத்தை நான் அதிகரித்தேன். எனினும் துரதிர்ஷ்டமாக தென் பகுதியில் வாக்குகள் குறைந்தன. அதுவே எமது தோல்விக்கு காரணமாக அமைந்தது. சில இடங்களில் நாம் வெற்றிபெற்றாலும் ஒட்டுமொத்தமாக நாம் தோல்வியை சந்தித்தோம்.

ஒரு புறம் நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டி, அபிவிருத்தி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் நிலைநாட்டி, சமூகத்திற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது உள்ளிட்ட விடையங்களை மேற்கொண்டோம். ஆனால் அவை தொடர்பில் நாம் எதிர்பார்த்த பிரச்சாரம் எமக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நவம்பர் 16 ஆம் திகதி நடந்துமுடிந்த தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட சஜித் பிறேமதாச தோல்வி அடைவதற்கு அவரை காலம் கடந்து ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தமையும், அவரது பிரசாரப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாமையும் பிரதான காரணம் என்று சஜித் பிறேமதாசவும் அவரது தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது விசுவாசிகளாக இருக்கும் கட்சியின் தலைமைத்துவப் பதவிகளில் இருப்பவர்களுமே சஜித்தின் தோல்விக்கு பிரதான காரணம் என்றும் பகிரங்கமாக சாடி வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ரணில் விக்கிரமசிங்க, தோல்விக்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்ந்து அடுத்துவரும் தேர்தல்களில் கட்சியை வெற்றிபெறச் செய்வதற்காக புதிய தலைவர் ஒருவரை நியமித்து அவரின் தலைமையில் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விசேடமாக இந்த கட்சிக்கோ அதிகாரிகளுக்கோ நிதி தொடர்பிலான பொறுப்பு காணப்படவில்லை. உண்மையில் நிதியை நாம் கையாளவில்லை. அதனையும் நான் நிராகரிக்கின்றேன். இது தொடர்பில் விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் காணப்படுமாயின் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். புதிய தலைவரை நாம் முன்னிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவருக்கு நாம் எமது கொள்கைகளை கையளித்து அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி பெறக்கூடிய தலைவராக அவரை உருவாக்க வேண்டும்.

அந்த மாற்றம் அத்துடன் நிறைவடைந்துவிடும். எங்களுக்கு அந்த தலைமையுடன் முன்னோக்கிச் செல்ல முடியும். பௌத்தர்களாகிய நாம் ஒரு விடயம் நடந்ததும் ஒருவர் மீது பழிவசுமத்தி அவர் மீது குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. அதனை புரிந்து அந்தப் பிழையை நிவர்த்திக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே இந்த செயற்பாடுகளுக்கு பௌத்த தேரர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு புதிய ஐக்கிய தேசியக் கட்சியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -