மலையக மக்கள் சஜித்தின் வெற்றியை உறுதி செய்து நேரகாலத்தோடு சென்று வாக்களிப்பில் ஈடுபட வேண்டும்

அக்கரபத்தனை பிரதேச இறுதி பிரசாரத்தில் அமைச்சர் திகா வேண்டுகோள் 
னாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் அனைவரும் நேரகாலத்தோடு சென்று வாக்களித்து புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதிப் படுத்த வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமிபு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி வேட்பளர சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அக்கரபத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிக் கட்ட பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அக்கரபத்தனை பிரதேச சபை உறுப்பினர் வீ. சிவானந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டங்களில் அவர் தொடர்ந்து பேசுகையில்,
எமது நாட்டின் ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பிரதான கூட்டணி கட்சிகள் இரண்டுக்கும் இடையில் போட்டி நிலவுகின்ற நேரத்தில் மலையக மக்கள் மிகவும் நிதானத்துடன் தமது எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். 1947 ஆம் ஆண்டு இந்த நாட்டில் குடியுரிமை பறிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக இருந்த எமது மக்களுக்கு 40 வருடங்களுக்குப் பின்னர் அமரர் ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக இருந்த போது 1988 இல் மீண்டும் பிரஜாவுரிமை கிடைக்க வழி செய்தார்.

அந்த வகையில் மலையக மக்கள் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களித்து வருவதோடு, அரசியலில் பங்கெடுத்தும் வருகின்றார்கள். வாக்களிப்பது எமது உரிமையாகும். அந்த உரிமையை நாம் சரியான முறையில் சரியானவரை தெரிவு செய்வதற்கு பயன்படுத்த வேண்டும்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுபவராக சஜித் பிரேமதாஸ இருக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர் யுத்த காலத்தில் மக்களைக் கொன்று குவிக்க காரணமாக இருந்தவர் என்றும், வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை என்றும் அரசியல் கட்சிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அவருக்கு எதிராக ஐக்கிய நாடுகள் வரை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்தகைய எந்த விதமான குற்றச்சாட்டுகளும், ஊழலும் இல்லாத வேட்பாளராக சஜித் பிரேமதாஸ காணப்படுகின்றார். இளம் வயதினரான சஜித் நாட்டை வழிநடத்தக் கூடிய வல்லமை படைத்தவர் என்பதை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கோட்டாபய அதிகாரத்துக்கு வந்தால் இராணுவ ஆட்சி நடைபெறலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது.
இது இவ்வாறு இருக்க, சஜித், கோட்டா ஆகிய இருவருமே தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளார்கள். அவற்றில் சஜித் வெளியிட்டுள்ள விஞ்ஞாபனத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் தொடர்பான பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்திருந்த 13 கோரிக்கைகளில் 9 முக்கிய கோரிக்கைகள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் எமது மக்களுக்கான தனி வீட்டுத் திட்டம் குறிப்படத் தக்கதாகும். அத்தோடு மலையகத்துக்கான பல்கலைக் கழகம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முதலான விடயங்களும் இடம்பெற்றுள்ளன.
எனவே, எமது தனி வீட்டுத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும், மலையக மக்கள் சகல வளங்களையும் பெற்று நிம்மதியாக வாழவும், நாட்டு மக்கள் சுதந்திரமாக போய்வரவும், சஜித் பிரேமதாஸ வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். தேசிய ரீதியில் சஜித் வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய நீரோட்டத்தில் மலையக மக்களும் சிறுபான்மை மக்களும் சங்கமிக்கும் போது எதிர்காலம் உண்மையிலேயே சுபிட்சம் நிறைந்ததாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இருந்த வாக்களிப்பு நேரம் இம்முறை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, இறுதி நேரத்தில் வாக்களிக்கலாம் என்று யாரும் அசட்டையாக இருந்து விடக் கூடாது. காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்னர் வாக்களித்து விட்டு அதன் பிறகு வேலைக்குச் செல்ல வேண்டும். இறுதி நேரத்தில் கூட மக்களை திசை திருப்புவதற்கான முயற்சிகளை சிலர் மேற்கொள்ள முயல்வார்கள். யார் எதைச் சொன போதிலும் எமது மக்கள் சஜித் வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு தமது பொன்னான வாக்குகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலாளர் தேசிய சங்கம் அக்கரபத்தனை பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களில் சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் நல்லதண்ணீர் தோட்டத்தில் மக்களை நேரில் சந்தித்து உரையாற்றுவதை படங்களில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -