கோட்டாவின் ஊடாக முஸ்லிம் சமூகத்துக்கு வரவிருக்கின்ற ஆபத்தில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு சஜித்தை வெற்றி பெற வைப்பதைத் தவிர வேறு வழி கிடையாது என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்;
சஜித் வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம்.51 நாள் பிரச்சினையின்போது ஒவ்வொரு நாளும் அலரிமாளிகையில் கூடிப் பேசுவோம்.அப்போது எங்கள் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று.
சஜித்தையே அவர் பிரேரித்தார்.பின்வரிசை எம்பிக்கள் அதற்கு ஆதரவு வழங்கினார்கள்.அதன் பின்னணியில்தான் சஜித் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.எமது தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றி வேட்பாளர்தான் சஜித்.
இவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் கோட்டா.அவரை விவாதத்துக்கு வருமாறு சஜித் அழைத்து வருகிறார்.கோட்டா மறுத்து வருகிறார்.ஒரு விவாதத்துக்கே வர மறுப்பவரால் எப்படி நாட்டை ஆட்சி செய்ய முடியும்?
கோட்டா மிகவும் ஆபத்தானவர்.அவர் எமது தனியார் சட்டத்தில் கைவைக்கும் திட்டத்தில் உள்ளார்.அவர் வந்தால் அது நிச்சயம் நடக்கும்.எமது கலாசாரத்துக்கு எதிராக அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்கிறார்.
மத்ரஸாக்களை அரசின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்.முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான சட்டங்கள் கொண்டுவரப்படும்போது எம்மால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.அவரை நாம் தோற்கடித்தால்தான் இந்த ஆபத்துக்களில் இருந்து எமது சமூகம் தப்பும்.
இந்த விடயத்தில் முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.கோட்டாவின் ஊடாக எமது சமூகத்துக்கு வரவிருக்கின்ற ஆபத்தை இல்லாது செய்ய வேண்டும் என்றால் சஜித்தை வெல்ல வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.-என்றார்.