கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இக்கோரிக்கையினை வெல்வதற்காக ஹக்கீமின் காலடியில் சென்று பல சந்திப்புக்களை ஏற்படுத்தி ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல், ஹக்கீமினாலேயே அதனைத் தடுத்து வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை நீக்கி ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் நமக்கான நகர சபையைப்பெறும் முயற்சியில் இறுதியாக காலை ஏழு மணியிலிருந்து மாலை ஏழு மணிவரை பள்ளிவாசல் சமூகம் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் அலைந்து திரிந்து இறுதியில் கொழும்பு YMMA யில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு வருகை தந்த ஹக்கீமிடம் கதைக்க சென்ற வேளையில் எமது முஹையடீன் ஜும்மாப் பள்ளிவாயல் சமூகத்தை மதிக்காது கையைத் தட்டிவிட்டு நிசாம் காரியப்பரைச் சந்திக்குமாறு கூறிவிட்டு, சற்றும் அவர்களை மதிக்காது, ஐந்து நிமிடமேனும் ஒதுக்காது, தட்டிவிட்டுச் சென்றமையும், மேலும் நிஸாம் காரியப்பரிடம் சென்று கதைத்தபோது, "உங்களைத் தலைவர் ஹக்கீம் ஏமாற்றுகின்றார்" என்கின்ற வார்த்தை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், பள்ளிவாயல் சமூகமும், உறுப்பினர்களும் தமது முயற்சியைக் கைவிடாது பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
• அடுத்து வந்த வெள்ளிக்கிழமை எமது ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், வர்த்தக சங்கம், ஏனைய அமைப்புக்களின் பிரதிதிநிதிகள் அடங்கிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வெற்றிபெறக்கூடியவர்கள் என ஊகிக்கப்படுகின்ற இரு வேட்பாளர்களையும் நேரடியாக தரகர்களின்றி சந்தித்து எழுத்து மூலமான உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்கப்பட வேண்டுமென்கின்ற பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.
• முதலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களை சந்திப்பதற்கான எழுத்து மூலக் கோரிக்கை அவரின் தேர்தல் செயற்பாட்டாளரான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களிடம் கையளிக்கப்பட்டபோது "இது விடயத்தில் நான் தலையிட முடியாது. முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பாக ஹக்கீம், ரிஷாத்திடமே ஒப்படைத்துள்ளோம்" என்கின்ற வார்த்தை எம்மை நிலைகுலையச் செய்தது.
• அதன் பின்னர் , சஜித்திடம் கதைப்பது சாத்தியப்படாத நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்ட கடித்திற்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை தங்காலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் சந்தித்து நகரசபைக்கான உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டதோடு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஸ மற்றும் எமது பள்ளித் தலைவர் முன்னிலையில் பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்திற்கும், எமது மாநகரசபை உறுப்பினர்களின் குழுக்களின் தலைவருக்குமிடையில் நகரசபையை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு ஊரின் பிரதிநிதிகளுக்கும் ஒரு பெரிய அரசியல் கட்சிக்குமிடையிலான இவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது முதல் தடவையாகும். அத்துடன் 2019.10.25இல் சாய்ந்தமருதில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் எமக்கான தனியான நகரசபை மட்டுமல்ல, எமது மீனவர்களின் நீண்டகாலத் தேவையான மீனவர் இறங்குதுறையை அமைத்து தருவதாகவும், இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்துவதைக் கருத்திற் கொண்டு ஆடைத் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான வாக்குறுதியும் வழங்கப்பட்டமை எல்லோரும் அறிந்ததே.
இவ்வாறு எமது நகர்வுகள் எமக்கு எமது நகரசபையை அடைவதற்குரிய சாத்தியங்கள் அதிகமாக இருப்பதை அண்மையில் பஸில் ராஜபக்ஸ அவர்களை சந்தித்த கல்முனைக் குழுவிடம் ஆணித்தரமாகவும் , அழுத்தமாகவும் "சாய்ந்தமருதுக்கான நகரசபை வழங்கப்படும்" என்கின்ற உறுதியை அவர்களிடமும் வழங்கியுள்ளமை நாம் அறிந்ததே. நிலமை இவ்வாறிருக்க, கடந்த காலங்களில் இம்மண்ணுக்கும், மக்களுக்கும் ஏற்பட்ட அவமானங்கள், கழுத்தறுப்புக்கள், தடுப்புக்கள் மத்தியில் இன்னும் நாம் ஏமாற வேண்டுமா, என்பதை பின்வரும் விடயங்களை அடிப்படையாக வைத்து நாமே தீர்மானம் எடுக்க வேண்டும்.
• கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கே எமது நகரசபை விடையத்தில் புதிர் சொல்லிய தலைவரின் பேச்சை மேலும் நம்புவதா? கல்முனைக்குப் பாதிப்பில்லாமல் வழங்குவேன். எனவே அவரும் தடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்து, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கான காயை இப்பொழுதிருந்தே நகர்த்த ஆரம்பித்து விட்டார் என்பதேயாகும்.
• பிரதான தடுப்பாளர் ஹரீஸின் ஆசீர்வாதத்துடன் ஜெமீல் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டதன் மர்மம் இப்பொழுது புரிகின்றதா?
• இக்கோரிக்கையினை அடியோடு மழுங்கடித்து தனது சுயநல அரசியலை அல்லக்கைகள் மூலமாக அடைவதற்கான சந்தர்ப்பத்தினை நாமே வழங்குவதா?
• இம்முறையும் கொழும்பில் வைத்து எழுதிக் கொடுக்கப்பட்டு பாடமாக்க வைக்கப்பட்டு மீண்டுமொரு போலி வாக்குறுதி சஜித் பிரேமதாஸவினால் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்ல. ஏனெனில் வாக்குறுதிகளை வழங்குவதிலும், அவ்வாறு போலி வாக்குறுதிதான் வழங்கினோம் என வெட்கப்படாமல் கூறுவதில் அலாதிப் பிரியம் கொண்டவர்தான் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்.
• 2015ம் ஆண்டிலிருந்து இன்றுவரை சற்றும் சளைக்காது தமது சொந்த சிரமம், பணம் போன்றனவற்றைக் கருத்திலெடுக்காது செயற்பட்டுவரும் பள்ளிவாயல் சமூகம், உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்களை அச்சுறுத்தவும், அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் குண்டர்களை ஏவி விடுவதை மேலும் நாம் வலுவூட்டுவதா?
எனவே மேலுள்ள விடயங்களை அடிபடையாக வைத்து எம்மை நெருங்கியுள்ள நகரசபையைப் பெறுவதற்காக எமது ஒற்றுமையை மீண்டும் பறைசாற்றி எதிர்வருகின்ற தேர்தலை கடந்த தேர்தலில் நாம் எவ்வாறு புத்திசாதுரியமாக செயற்பட்டோமோ அதேபோன்று இத்தேர்தலிலும் செயற்படப்போகின்றோமா அல்லது நகர சபைப் பிரச்சினையை அடுத்த பரம்பரைக்கும் ஒப்படைப்பதா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டிய தீர்க்ககரமான தருணத்தில் இருக்கின்றோம்.
வஸ்ஸலாம்
சாய்ந்தமருது –மாளிகைக்காடு மாநகர சபை உறுப்பினர்களும், பொது அமைப்புக்களும்.