இந்த வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த வழங்கிலிருந்து ஜனாதிபதியை விடுவிப்பதாக விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாதென்பதால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு அவர் மீது விடுக்கப்பட்டிருந்த பயணத் தடையையும் நீக்குவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த கோபுரம் மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபாய் அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுக்களின் கீழ் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள விஷேட மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான எல்.டி.பி.தெஹிதெனிய எஸ். துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் விசாரித்து வந்தனர்.
இதேவேளை, இதற்கு முன்னதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபாய் பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நிரந்தர விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் இடம்பெறும் குறித்த வழக்கு விசாரணைகளை ஜனவரி மாதம் 9ஆம் திகதி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக விசேட மேல் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே குறித்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிப்பதாக விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.