திருகோணமலையில் மிகப்பெரிய ஏற்றுமதி வலயம் நிறுவப்படும்: கிண்ணியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-

சிங்கப்பூர் நிறுவனத்தின் உதவியுடன் பிரதமர் ஊடாக திருகோணமலை துறைமுகம் மற்றும் சீனக்குடா விமான நிலையத்தை மையப்படுத்தி, இலங்கையில் மிகப்பெரிய ஏற்றுமதி வலயத்தை நிர்மாணிப்பதற்கான திட்டமிடல்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதன்மூலம் திருகோணமலை விரிவாக்கப்பட்ட கேந்திர நிலையமாக மாற்றம்பெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;

பிரதமர் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டமொன்றை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம். சிங்கப்பூர் நிதியுதவியில் இங்குள்ள 11 பிரதேச செயலகங்களிலும் வெவ்வேறுவிதமான தொழில் பட்டறைகளை அமைக்கவுள்ளோம். குறிப்பாக, திருகோணமலை துறைமுகத்தையும் சீனக்குடா விமான நிலையத்தை மையமாக வைத்து மிகப்பெரிய ஏற்றுமதி வலயத்தை நிர்மாணிப்பதற்காக திட்டங்கள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
தனியார் முதலீகளை கொண்டுவந்து திருகோணமலை மாவட்டத்தில் வர்த்தக கேந்திர நிலையங்களை உருவாக்கினால், அரச தொழில்களுக்காக அலையவேண்டிய தேவை இருக்காது. சஜித் பிரேமதாசவை ஆட்சிக் கதிரையில் அமர்த்துவதன் மூலம் இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து திருகோணமலை மாவட்டத்தை மிகப்பெரிய வர்த்தக கேந்திர நிலையமாக மாற்றமுடியும் என்றார்.
2001ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை சந்தித்து, அந்நாட்டின் நிதியுதவியில் மூதூர் - கிண்ணியா பாலம் அமைக்கப்பட்டது ஒரு வரலாற்றுப் பதிவாகும். ஆனால், அந்தப் பாலத்தின் பெயர்ப்பலகையில் எங்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதா என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

எமது கட்சி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளது. ஆனால், அவற்றை நாங்கள் மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் அன்றிலிருந்து இன்றுவரை சவூதி அபிவிருத்தி நிதியத்தின் மூலம் 10 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை பெற்றுத் தந்துள்ளார்.
கிண்ணியா பாலம் தொடக்கம் தம்பலகாமம் வரை செல்லும் கார்பட் பாதை அபிவிருத்திக்காக வீதி அதிகார சபையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. நிதி அமைச்சில் சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியத்துடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் ஒவ்வொரு சந்தரப்பங்களிலும் தெளபீக் எம்.பி. அங்கு இருப்பார்.
45 மில்லியன் டொலர் நிதியில் கந்தளாய் பிரதேசத்தில் பாரிய நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்படுகின்றது. 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் இரு போகங்களிலும் விவசாய பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விதத்தில் நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு ஏராளமான அபிவிருத்தி திட்டங்களை நாங்கள் கிண்ணியா நகரில் செய்திருக்கிறோம்.
3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கிண்ணியா, மூதூர், தோப்பூர், ஏறாவூர் தள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு அண்மையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. பௌதீகவள தேவைகளையும் முற்றாக பூர்த்திசெய்யும் விதத்தில் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.

இப்பிரதேசத்தில் தேவையில்லாத விதத்தில் முறுகல் ஏற்படாத வகையில் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். அரசியலில் பக்குவமாகவும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும். அமைச்சு தன்னிடம் வந்துவிட்டது என்பதற்காக, அடிக்கல் நடும்போது திட்டத்துடன் சம்பந்தப்பட்டவர்களை புறக்கணிக்க முடியாது. அந்த அமைச்சு பதவியை காப்பாற்றுவதற்கே நாங்கள் பாரிய தியாகங்களை செய்திருக்கிறோம்.
அவர்மீது நம்பிக்கையில்லா பிரேரணை வந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியிலும் நிறையப்பேர் ஆதரவாக வாக்களித்திருப்பார்கள். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும்போது பெருந்தன்மையுடன் அனைவரையும் அரவணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். ஒருவர் செய்த வேலைத்திட்டத்துக்கு இன்னொருவர் பெயர் போட்டுக்கொள்வதை கட்சி ஆதரவாளர்கள் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
அண்மையில் றிஷாத் பதியூதினுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நாம் குரல் எழுப்பினோம். தனிப்பட்ட நபரின் நலனுக்காக அல்ல, முழு முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகவே நாங்கள் அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்தோம். எவருடைய பாராட்டுகளையும் எதிர்பார்த்து நாங்கள் அதனைச் செய்யவில்லை.

நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமையுடன் செயற்பட்டால், சஜித் பிரேமதாச ஜனாதிபதியான பின்னர் இதைவிட பாரிய அபிவிருத்திகளை செய்யமுடியும். மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். புல்மோட்டை பிரதேசத்தில் காணப்படும் மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரியிருக்கிறேன் என்றார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -