அரசியல் அனுபவம் அறவே இல்லாத-கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியாத-சஜித்தை விட 20 வயது கூடிய கோட்டாவால் எப்படி இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும்?
இவ்வாறு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கேள்வி எழுப்பியுள்ளார்.சஜித் பிரேமதாசாவை ஆதரித்து அம்பாறை மாவட்டம் மத்திய முகாமில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறுகையில்;
51 நாள் ஆட்சிக் கவிழ்ப்பின்போது ஒரு கூட்டம் ஒன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.அப்போது உரையாற்றிய எமது தலைவர் ரவூப் ஹக்கீம் ரணிலிடம் கூறினார் இப்போது இந்தப் போராட்டத்தில் உங்களுடன் நிற்பதுபோல் எதிர்காலத்திலும் நிற்பதாக இருந்தால் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்று வேண்டும் என்று.
பின்வரிசை எம்பிக்கள் கைதட்டி வரவேற்றனர்.இந்த நாட்டில் ஜனநாயகம் வாழவேண்டும்.சிறுபான்மை இனம் இந்த நாட்டில் வாழ வேண்டுமா ? வாழக்கூடாதா என்ற நிலைதான் இன்று உள்ளது.கோட்டாவுடன் இருப்பவர்கள் அனைவரும் பேரினவாத இயக்கங்களின் உறுப்பினர்களாவர்.அவர்கள் எங்களுக்குச் செய்த அநீதிகளைக் கண்டோம்.
முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக கோட்டா இந்த அமைப்புக்களின் வாய்களை அடைந்துள்ளார்.மறுபுறம்,முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஹிஸ்புல்லா,பஷீர் ,ஹசன் அலி,அதாவுல்லாஹ் போன்ற சிலரை வைத்து சஜித்துக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் வேலைகளை செய்து வருகிறார்.
இந்த நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற வெறியில் இருக்கின்றார் சஜித்.அவரது தந்தை அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வேலை செய்பவர்.அதைவிடவும் நேரத்தோடு எழுந்து வேலை செய்யப்போவதாக சஜித் கூறுகின்றார்.
சஜித்தைவிட 20 வயது அதிகமாக உள்ள கோட்டா எப்படி சஜித்துக்கு ஈடுகொடுக்கப்போகிறார்? சஜித் தனிமையில் இருந்து ஊடகங்களுக்கு பேட்டி வழங்குகிறார்.எந்தத் தரப்பினரையும் தைரியமாக எதிர்நோக்குகிறார்.பதிலளிக்கிறார்.
ஆனால்,கோட்டா அப்படியில்லை.அவருக்கு அருகில் மஹிந்த,தினேஷ் குணவர்தன,மேலும் 15 அமைச்சர்கள் என ஒரு பட்டாளத்தை வைத்துக்கொண்டே அண்மையில் ஊடகங்களை சந்தித்தார்.கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முடியவில்லை.
பதில் கொடுக்க முடியாமல் மஹிந்தவை,தினேஷைத் பார்க்கின்றார்.அவர்கள்தான் பதிலளித்தார்கள்.அரசியல் அனுபவம் அறவே இல்லாத கோட்டாவால் ஜனாதிபதியாகி எப்படி இந்த நாட்டை ஆட்சி செய்யப்போகிறார்?
ஆனால்,நாட்டை ஆள்வதற்கான அத்தனை திறமையும் சஜித்துக்கு உண்டு.அதனால்தான் எமது தலைவர் ரவூப் ஹக்கீம் அவரைத் தெரிவு செய்தார்.அவரது தெரிவு சரியானதே.
நாட்டுக்குத் தேவையான நல்ல பல திட்டங்களை சஜித் வைத்துள்ளார்.நாங்கள் மைத்திரிக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்தோம்.ஆனால்,அவர் சரியாகச் செயற்படவில்லை.ஜனாதிபதி ஒரு பக்கம்,பிரதமர் ஒரு பக்கம் என்று இருந்ததுதான் அதற்குக் காரணம்.அதனால்தான் ஜனாதிபதி பதவியும் நாடாளுமன்ற ஆட்சியையும் ஒரு கட்சிக்கு அதாவது,ஐக்கிய தேசிய கட்சிக்கு வர வேண்டும்.அப்போதுதான் சேவைகளை முழுமையாகச் செய்ய முடியும்.
ஆகவே,நாம் அனைவரும் ஒன்றிணைந்து சஜித்தை வெல்ல வைப்போம்-என்றார்.