சஜித் 55வீத வாக்குகளால் வெற்றிபெறுவார் என்கிறார் சங்கர்.
காரைதீவு நிருபர் சகா-ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் அம்பாறை மாவட்ட தமிழ்ப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக அம்பாறை மாவட்டமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இச்சந்திப்பு நேற்று சஜித்பிரேமதாசவின் தனிப்பட்ட பிரதான தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள கொழும்பு.2இலுள்ள பௌச் மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு அலுவலகம் திறக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கிழக்கிற்கு முன்னாள் ஆளுநர் ரோஹிதபோகல்லாகம பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திப்பின்போது அமைச்சர்களான ராஜிதசேனாரத்ன மத்துமபண்டார அமைச்சர் சஜித்தின் தேர்தல் இணைப்பாளர்களான முன்னாள் கிழக்கு ஆளுநர் ரோஹிதபோகல்லாகம செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரும் உடனிருந்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் 2000இல் சுயேச்சையாகப்போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவானவர் குணசேகரம் சங்கர். பொத்துவில் கோமாரியில் வசித்துவரும் சங்கர் 2015இல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்சார்பாக பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டவர்.
ஜனாதிபதிதேர்தல் அறிவிப்பைத்தொடர்ந்து அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் சார்பாக அமைச்சர் சஜித்துடன் முதன்முதலாக சந்தித்து கலந்துரையாடியவர் முன்னாள் எம்.பி. சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுதொடர்பாக அவர் கருத்துத்தெரிவிக்கையில்:
சஜித்தைப்பொறுத்தவரை விதையும் நல்லது நிலமும் நல்லது காலநிலையும் நல்லது அதனால் விளைச்சலும் நன்றாகவே இருக்கும். 55வீத வாக்குகளால் அவர் வெற்றிபெறுவார் என்றநம்பிக்கை உள்ளது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி பொத்துவில் சம்மாந்துறை கல்முனை ஆகிய 7தமிழ்ப்பிரதேச செயலகப்பிரிவுகளிலுள்ள அபிவிருத்தி தொழில்வாய்ப்புகள் காணிப்பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினோம். இன்னும் 60ஆம் கட்டை பொத்துவில் தமிழ்மக்கள் 500நாட்களைத்தாண்டியும் சத்தியாக்கிரகப்போராட்டம் நடாத்திவருவதையும் எடுத்துரைத்தேன்.
'ஸ்ரீ' போராட்டம் நிலவியகாலத்தில் ஜனாதிபதி பிரேமதாச ஒரேஇரவில் ஸ்ரீ பிரச்சினையை தீர்த்துவைத்தவர். 10வருடமாக விமல்வீரவன்ச அமைச்சராகவிருந்தபோது வடக்கு கிழக்கில் எத்தனை வீடுகட்டியிருப்பார். ஆனால் அமைச்சர் சஜித் கடந்த 4வருடங்களில் பலநூறு வீடுகளைகட்டி பகிரங்கமாக திறந்துவைத்துள்ளார். எதிர்காலத்திலும் அவர் இனமதபேதம்பாராமல் இத்தகைய பணிகளை மென்மேலும் செய்வார் என எதிர்பார்க்கலாம்.
இதனைவிட சமாதானம் அமைதியை விரும்புபவரும் சகலஇனமத மக்களையும் அரவணைத்துச்செல்ல தயாராகவிருப்பவர். அவரது தந்தையின்காலத்தில் இந்தியஇலங்கை ஒப்பந்தம் உருவானதைப்போல் இவரும் இனப்பிரச்சனையை தீhத்துவைப்பார் என்ற நம்பிக்கையுள்ளது.
வெள்ளைவான் கலாசாரத்தையும் அராஜகத்தையும் ஏமாற்றுபவர்களையும் தமிழ்மக்கள் ஏலவே நன்குணர்ந்தவர்கள். பொதுவாக தமிழர்கள் அறிவை முன்வைத்து உணர்ச்சியை பின்வைப்பவர்கள். ஆனால் தமிழ்த்தலைமைகள் இன்று உணர்ச்சிக்கு முக்கியத்துவம்கொடுத்து நிறைவேற்றமுடியாத 13அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தீர்வெடுக்கமுடியாமல் மக்களை நட்டாற்றில் கைவிட்டுள்ளனர்.
எவ்வித நிபந்தனையையும் முன்வைக்காமல் அமைச்சர்களான ஹக்கீம்றிசாட் பதியுதீன் போன்றவர்கள் சஜித்திற்கு ஆதரவளித்துள்ளனர். அவர்கள்தான் உண்மையில் இராஜதந்திரிகள் அரசியல் சாணக்கியர்கள். சமுகம்சார் தேவைகளை இதனூடாக தீர்த்துவைக்கமுடியுமென நம்புகிறார்கள்.
எனவே மேலும் மேலும் தமிழ்மக்கள் ஏமாறாமல் சரியான தேர்வான வேட்பாளர்சஜித்தின்பின்னால்அணிதிரள்வோம் வாரிர்; என்றார்.