எம்.ரீ. ஹைதர் அலி-
பொறியியலாளர் ஷிப்லி பாறூக்குடன் அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரதி பிரதம அதிகாரி மார்கஸ் பீ. காபென்டர் மற்றும் விசேட அரசியல் நிபுனரான நஸ்ரின் மரிக்கார் ஆகியோர் சந்திப்பு
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுடைய இல்லத்தில் இலங்கை அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றுகின்ற அரசியல் பிரதி பிரதம அதிகாரி மார்கஸ் பீ. காபென்டர் அவர்களும், மேலும் இத்தூதரகத்தில் கடமையாற்றுகின்ற விசேட அரசியல் நிபுனரான நஸ்ரின் மரிக்கார் அவர்களும் உத்தியோகபூர்வ சந்திப்பினை ஏற்படுத்தி இருந்தார்கள்.
இந்த சந்திப்பின்போது சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் பற்றியும் சிறுபான்மை சமூகம் அரசியல் கழத்தில் எவ்வாறு நடந்துகொள்ள இருக்கின்றது என்ற விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பிரதானமாக ஜனாதிபதி வேட்பாளர்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதரவுகள் பற்றியும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது. அது மாத்திரமின்றி கடந்த காலங்களில் சிறுபான்மையினர் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு எவ்வாறு இருந்தது என்பது பற்றியும், தற்போது இருக்கின்ற அரசியல் சூழல் வெறுமென இனவாதத்தை தூண்டுவதாகவும் மற்றைய இனங்களை சாடுகின்ற விதம் பற்றியும் ஆராயப்பட்டது.
மேலும் கடந்த 21.04.2019ம் திகதி இடம் பெற்ற ஈஸ்டர் தாக்குதல் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன் பொழுது முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றியும் தற்பொழுது முஸ்லிம் சமூகம் நாடளாவிய ரீதியில் எதிர் நோக்குகின்ற சவால்கள் பற்றியும் கடந்த கால அரசாங்கத்தின் செயற்பாடுகள் முஸ்லிம்கள் சம்பந்தமான விடயங்களில் சட்டமும் ஒழுங்கும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக முஸ்லிம் பெண்களின் ஆடை விடயம் மற்றும் முஸ்லிம்களின் தனிப்பட்ட விடயங்களை கேள்விக்குறியாக்கியுள்ள தற்கால சூழ்நிலையில், இதற்கான தீர்வுகள் எவ்வாறு அமையும் என்பது பற்றியும் மிக ஆழமாக கலந்துரையாடப்பட்டது.