சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஹசன் அலி கூறுகிறார்
எஸ்.அஷ்ரப்கான்-
இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எந்த பிரச்சினைகளும் கிடையாது என்பதாக பெருந்தேசிய கட்சிக்காரர்களும், அவர்களின் முகவர்களும் நடந்து வருவதன் காரணமாகவே வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் உற்பத்தி திறன்கள் ஊக்குவிப்பு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் வேட்பாளராக நிற்க நேர்ந்து உள்ளது என்று இக்கட்சியின் செயலாளர் நாயகம் சுகாதார மற்றும் போசாக்குத் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி தெரிவித்தார்.
இவர் இது குறித்து இன்று (05) சனிக்கிழமை ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,
இது தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்ற தேர்தல் ஆகும். சிறுபான்மை மக்கள் என்கிற வகையில் நாம் இத்தேர்தலில் அதீத விழிப்புடனும், மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டி உள்ளது. மற்றொரு சிறுபான்மையினரான தமிழ் மக்கள் அவ்விதமாகவே செயற்படுகின்றனர். தமிழ் மக்களின் தலைவர்கள் நிபந்தனை அற்ற முறையில் எவருக்கும் ஆதரவு வழங்க்க தயாரில்லை என்பதில் பற்றுறுதியாக உள்ளனர் . ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எந்த பிரச்சினைகளும் கிடையாது என்பது போல பெருந்தேசிய கட்சிக்காரர்கள் நடந்து கொள்கின்ற அதே நேரத்தில் இவர்களுக்கு நிபந்தனை அற்ற வகையில் ஆதரவு வழங்க முஸ்லிம் தலைவர்கள் முன்வந்து உள்ளனர்.
விசேடமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. நிர்வாகம், காணி நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. எமது பெருந்தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்த தீர்க்கப்பட வேண்டிய உண்மையான பிரச்சினைகள் இன்று பின்னிலைப்படுத்தப்பட்டு அடிமட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றன. கார்ப்போட் வீதிகள் போட்டு தந்தால் போதும் என்று சொல்கின்ற அரசியல் முகவர்கள்தான் தலைவர்களாக நடமாடுவதை காண முடிகின்றது. அதே நேரத்தில் பெருந்தேசிய கட்சிகளின் மறைமுக சதிகள் மூலமாக பெருந்தலைவர் அஷ்ரப் கனவு கண்ட முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளில் இருந்து கிழக்கு முஸ்லிம் மக்கள் தூர விலகி நிற்பதை உணர முடிகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் தற்போதைய அரசியல் அமைப்புக்கு மாற்றமாக எதையும் செய்யவே மாட்டார் வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றார். தற்போதைய அரசியல் அமைப்புக்கு விரோதமாக எவருடனும் உடன்படிக்கை செய்ய தயாரில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றி, யாப்பு மாற்றம் மூலமாக தீர்வை தர போவதாக சொல்லி, கடந்த நான்கரை வருடங்களாக இந்நாட்டு மக்களை ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றி இருக்கின்றது என்கிற முடிவுக்கு நாம் வர நேர்ந்து உள்ளது. அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு தயாரில்லாத இவர்களுடன் பேசுவதால் முஸ்லிம் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்க போவதே இல்லை. இதே நேரம் மொட்டு கட்சி எமக்கு எழுத்துமூல அழைப்பு விடுத்து எம்மை அழைத்து பேசியது. அவர்கள் கேட்டு கொண்டமைக்கு அமைய நாம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கான எமது தீர்வு யோசனைகளை அவர்களின் பரிசீலனைக்கு எழுத்தில் சமர்ப்பித்தோம். ஆயினும் அவர்களிடம் இருந்து எந்த விதமான உத்தரவாதமும் எமக்கு இப்போது வரை கிடைக்கவில்லை.
நாம் யாருக்கும் நிபந்தனை அற்ற வகையில் ஆதரவு வழங்க கொத்தடிமைகள் அல்ல. எமது சமூகத்தின் விருப்புகளையும், வாக்குகளையும் செல்லா காசுகள் ஆக்க முடியாது. ஆகவேதான் நாம் மாற்று வழி குறித்து சிந்தித்தோம். எமது தவிசாளர் பஷீர் சேகு தாவூத் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்டு பணம் செலுத்தி உள்ளார். இருப்பினும் பெருந்தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் எவரேனும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சரியான உத்தரவாதம் தருகின்ற பட்சத்தில் அவர் போட்டியிடுவதில் இருந்து விலகி கொள்வார். தமிழ், முஸ்லிம் மக்களை பிரித்து வைத்திருப்பதில் பெருந்தேசிய கட்சிகள் வெற்றி கண்டு உள்ளன. ஆயினும் இரு சமூகங்களும் ஒருமித்து நிற்பதன் மூலமே பொருத்தமான அரசியல் தீர்வை தமிழ் பேசும் மக்கள் எட்ட முடியும். பஷீர் சேகு தாவூத்தை தமிழ் பேசும் மக்கள் சமூகத்தின் பொது வேட்பாளராக நிலை நாட்ட வேண்டும் என்பதே எமது பேரவா ஆகும். இதற்காக தமிழ் தலைமைகளுடன் பேசுவதற்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்.