'கல்வி அபிவிருத்தியினூடாக சமாதான சகவாழ்வு' என்ற தொணிப்பொருளின் கீழ் மேற்படி செயற்பாடானது தொடர்ச்சியான சமாதான பயணத்தின் ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது. மேற்படி பாடசாலைகள் பல்வேறு தேவைகளைக் கொண்டிருந்த போதிலும் கணணித் தொகுதி கிடைக்கப் பெற்றமையானது மாணவர்களின் திறன்களை வளர்க்க பெரிதும் பயன்படும் என அதிபர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முஸ்லிம் எய்ட் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் இன்றைய காலகட்டத்தில் நமது நாட்டிற்குத் தேவைப்படுகின்ற சமாதான சகவாழ்விற்கும் சமய, சமூக ஒருமைப்பாட்டிற்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது என்ற கருத்தினை இரு அதிபர்களும் உறுதியுடன் முன்வைத்தனர். சமயத்தலைவர்கள் இருவரும் இக் கருத்தினை வரவேற்று ஆசீர்வதித்தனர்.
'கணணி அறிவின்றி கல்வி கற்றலில் போதிய பயனில்லை என்று பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கணணிகள் 80 வீதம் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், ஒரு கணணி கொண்டுள்ள முழுமையான ஆற்றலில் 05 வீதத்தினை மாத்திரமே இன்று ஒருவர் பயன்படுத்துகின்றார். எனவே முழுமையான சிறந்த பயனை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்' என்ற ஆழமான கருத்தை பௌத்த குருவான சங்கைக்குரிய சுமேத தேரர் தெரிவித்தார்.
கணணிகள் தேவைப்பட்ட பாடசாலைகளை இனங்காண்பதில் ரெக்டோ மற்றும் ஹோப் ஒப் பீப்பிள் ஆகிய பங்காளர் அமைப்புகள் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தன. இது விடயத்தில் நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத அமைப்பாகிய நெய்பர் அமைப்பின் ஆலோசனைகள் பெறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.