இலங்கை அனைத்துப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு சரியான தீர்வுகள் கிடைக்காவிடின் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான வேலை பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம்.நௌபர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது, நீண்ட காலமாக இருந்து வரும் பல கோரிக்கைகளை முன் வைத்து பல்கலைக்கழக ஊழியர்கள் கடந்த 2019.07.30 ஆம் திகதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தினை மேற்கொண்டனர். இருந்த போதிலும் சம்மந்தப்பட்ட தரப்பினர்களால் தீர்வுகள் வழங்கப்படாததினால் மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் 2019.08.28, 29 ஆம் திகதிகளில் (இரு நாட்கள்) அடையாள வேலை நிறுத்ததினை மேற்கொண்டதுடன், 29 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கும் முன்னால் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். இதற்கமைவாக பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் அதன் தேசிய தலைவர் திரு. பி.எச்.தம்பிக்க பிரியந்த தலைமையில் கொழும்பில் நடைபொற்றபோதே எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழாங்காவிட்டால் தொடரான வேலை பகிஷ்கரிப்பை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தலைவர் நௌபர் மேலும் தெரிவித்தார்.