"இலங்கையைப் பொறுத்தளவில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பதெல்லாம் பேச்சளவில் மாத்திரமே இருக்கிறன. இனங்களிடையே சந்தேகமும் புரிந்துணர்வின்மையுமே இன்று மேலோங்கி காணப்படுகின்றது. உண்மையில் நல்லிணக்கம், சகவாழ்வு என்பன பெரும்பான்மை சமூகத்தினரிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும்" என்று கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.
ஜீ.ஐ.இஷட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பொது நூலக சமூக வள நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மாலை நடைபெற்ற நல்லிணக்கம் தொடர்பான கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் செயற்றிட்ட ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர் பொன் செல்வநாயகம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி அமீருல் அன்சார் மௌலானா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.அப்துல் கபூர், கிறிஸ்தவ போதகர் ஏ.கிருபாகரன், பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் முபிஸால் அபூபக்கர், கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.சித்தீக், ஆலோசகர் ரிஷாத் ஷரீப், ஆசிரிய ஆலோசகர் எம்.லற்குணம் உட்பட தமிழ், முஸ்லிம் சிவில் சமூகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
அங்கு முதல்வர் றகீப் மேலும் தெரிவிக்கையில்;
"ஏப்ரல்-21 தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுகின்ற நிலையே காணப்படுகின்றது. அரசியல் ரீதியாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பரப்புரை செய்யப்பட்ட போதிலும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், அத்தாக்குதலின் பின்புலம் குறித்து யதார்த்தமான கருத்துக்களைத் தெரிவித்திருந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் போன்று எல்லா மதகுருக்களும் அரசியல் தலைமைகளும் இருப்பார்களானால் எமது நாட்டில் தலைவிரித்தாடுகின்ற இனவாதம் நிச்சயம் ஓய்வுநிலைக்கு வரும் எனலாம்.
நல்லிணக்கம், சகவாழ்வு பற்றிப் பேசும்போது இரு விதங்களாக ஆராய வேண்டியுள்ளது. ஒன்று வடக்கு- கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியதாகவும் மற்றது முழு நாட்டை மையப்படுத்தியதாகவும் அமைந்துள்ளது. தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தளவில் இங்கு இடம்பெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் இனத்துவ நோக்கல்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்து முதலில் சிந்திக்க மீண்டும்.
பல்லினங்கள் வாழ்கின்ற எமது நாட்டில் இன்று அவசியப்படுவது நல்லிணக்கம்தான். அது முதலில் பெரும்பான்மையினரிடமிருந்து சிறுபான்மையினரை நோக்கியதாக அமைதல் வேண்டும். குறிப்பாக பௌத்த குருமார்கள், சிறுபான்மையினர் மீதான நல்லெண்ணத்தையும் அன்பையும் வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறே சிங்கள கடும்போக்குவாதிகள், தமது அந்த நிலைப்பாட்டைத் தளர்த்த முன்வர வேண்டும். இவற்றின் மூலமே சிறுபான்மையினர் மத்தியில் பெரும்பான்மையினர் மீதான நம்பிக்கையையும் நாட்டுப்பற்றையும் கட்டியெழுப்ப முடியும் என்பதுடன் அனைவரும் இலங்கையர் என்ற கொடியின் கீழ் ஒன்றிணைவதற்கான சூழல் ஏற்படும்."என்றும் முதல்வர் றகீப் குறிப்பிட்டார்.