வீதிக் கலைஞர்களின் கண்காட்சி நிகழ்ச்சி, கொழும்பு விகாரமகா தேவிப் பூங்கா வெளியரங்கில், கடந்த (07) சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது, முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, அவ்விடத்திற்கு சமூகமளித்து, வீதிக் கலைஞர்களின் கண்காட்சியைப் பார்வையிட்டார்.
இதன்போது, கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது வழங்கல் நிகழ்வில் தமக்கு அசாதாரணம் இழைக்கப்பட்டதாகவும், முறையாக விண்ணப்பிக்காத பலருக்கு சிபாரிசின் மூலம் விருதுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் கலைத்துறையில் எப்பணியும் சிறப்புறச் செய்யாதவர்களுக்கும் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ள நிலையில், தாம் கலையுலகில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமைக்கு எவ்வித விருதுகளும் வழங்கப்படவில்லை என்றும் முறைப்பாடு செய்தனர். அத்துடன், முறையாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து கொடுத்த பல சிரேஷ்ட கலைஞர்களின் விருதுகளும் தகைமைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இதனை அவதானத்தில் எடுத்துக்கொண்ட பைஸர் முஸ்தபா எம்.பி., இது தொடர்பில் தான் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரான மனோ கணேசனுடன் கலந்துரையாடி, விரைவில் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக வீதிக் கலைஞர்களிடம் உறுதியளித்தார்.