முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் சம்மந்தப்படட அதிகாரிகள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் குறித்த விடயம் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டு வந்ததுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களிடமும் பிரதேச பொதுமக்கள் நலன்புரி அமைப்புக்களால் முறைப் பாடும் செய்யப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி செயலகத்துக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டதையடுத்து
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத மணல்,கிறவல்,கருங்கல் அகழ்வு தொடர்பில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக உயர்மட்ட குழுவொன்று முல்லைத்தீவுக்கு உடனடியாக நேற்று (15) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களோடு புவிச்சரிதவியல் சுரங்கப் பணியக அதிகாரிகள் மற்றும் புவிச்சரியவியல் அளவியல் தலைமைப் பணியக அதிகரிகள் உள்ளிட்டோர் இன்று முல்லைத்தீவு- கேப்பாப்புலவு,நந்திக்கடல் கள்ளியடி மற்றும் பாவடைகல் ஆற்றுப்பகுதி ,இருட்டுமடு, மூங்கிலாறு சுதந்திரபுரம் போன்ற பகுதிகளிற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்
இதன்போது நடைபெறும் சடடவிரோத நடவடிக்கைகளை கண்டு அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளதோடு குறித்த பிரச்சனைகள் தொடர்ப்பில் விரிவாக ஆராய்ந்தனர்.
கருங்கல்,கிறவல்,மணல் உள்ளிட்ட கனிய வளங்கள் சட்டவிரோதமாக சூறையாடப்பட்டு வந்ததுடன் சட்டரீதியாக அனுமதி பெற்றும் சிலர் மேற்படி கனியப் பொருட்கள் அகழும் பொழுது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பிலும் ஆய்வுசெய்யப்பட்டது.
இதனால் தாவரப்போசணை அற்றுப்போதல் ,நிலத்தடி நீர் வளம் குறைதல்,மணல் வளம் குறைதல் போன்ற பாரதூரமான விடயங்கள இந்த ஆய்வில் இனங்கானப்பட்டதுடன், குறிப்பிட்ட இடங்கள் ஆய்வு முடிவுகள் வெளியாகும்வரை தற்காலிகமாக அகழ்வுப்பணிகள் இடம்பெறாதவாறு தடைசெய்யப்பட்டன.
