இம்முறை இவர்களுடைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா.?........
முஸ்லிம்காங்கிரஸ் கட்சிக்குள் மிக கடுமையான உள்ளக போட்டி நடை பெறுகின்ரது என்பதனை மிக இலகுவாக எல்லோரும் அறியுமுகமாக இருகின்ற அதே நேரத்தில் ஏற்கனவே செல்வாக்கிழந்த அடுத்த ஊரின் ஆதரவை எப்படியாவது பெற்றுவிடலாம் என்பதில் நகர சபை விடயத்தை முன்னிலைப்படுத்தி ஹரீசை ஓரம் கட்டக்கூடிய காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா.? என்பது கூட பரவலாக செய்தித்தளங்கள், பிராந்திய நடப்புக்கள், முகநூல் பதிவேற்றங்கள் போன்றவற்றின் மூலம் ஊகித்துக்கொள்ள கூடியதாக உள்ளது.
இஸ்தாபக தலைவர் அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்த ஹரிசை ஓரங்கட்ட நினைப்பதும் காலத்துக்கு காலம் ஹரிஸ் கட்சியின் தலைமை அப்துர் ரவூப் கிபத்துல் ஹக்கீமுடன் முரண்பட்டுக்கொள்வது இன்று நேற்றல்ல வரலாறு முழுக்கவே இடம் பெற்று வந்துள்ள விடயமாகவே இருந்து வருகின்றது. அதன் உச்சக்கட்டமாக 2004ம் ஆண்டைய பாராளுமன்ற தேர்தலில் ஹக்கீம் அம்பாறையில் போட்டியிட ஹரிஸ் முஸ்லிம் காங்கிரசினை விட்டு வெளியேறி அதாவுல்லா அணியுடன் போட்டியிட்டு தோல்வியை சந்தித்திருந்தார்.
ஆனால் மறுபக்கத்திலே பெரும் தலை அஸ்ரப்பை இழந்து ஐந்து வருடங்கள் கடந்திறாத நிலையில் மிகவும் மனவேதனையுடன் இருந்த அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அதிலும் முக்கியமாக கல்முனை தொகுதி மக்கள் கட்சியின் தலைமைக்கு மரியாதை அளிக்கும் வகையில் ரவூப் ஹக்கீமிற்கு 68627 வாக்குகளை அளித்து வெற்றியடை வைத்தனர்.
இப்பொழுது பூதாகரமாக மாறியுள்ள விடயம் கல்முனை வடக்கு எல்லை விவகாரம். இதனை வைத்து தலைமை எவ்வாறு அரசியல் காய்களை நகர்த்தி கல்முனை முஸ்லிம்களின் பெரும்பான்மை வாக்குகளை தாங்கள் போட்டியிடப்போகும் சின்னத்துக்கு அளிக்க வைப்பது என்ற சித்த விளையாட்டுக்களிலே மும்முரமான கவனத்தினை செலுத்தி வருகின்றார். எல்லை விடயத்தில் கட்சிக்குள்ளே உறுதியான நிலைப்பாடு இல்லை. என்ற சில செய்திகள் ஏர்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், தீர்வு என்ற பெயரில் கல்முனையின் பெரும்பாலான பகுதி விட்டுக்கொடுப்புச் செய்யப்பட்டு விடுமோ.? என்ர அச்சம் உள்ளதை கவலை கொள்ளச் செய்கின்றது என வை.எல்.எஸ் ஹமீட் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கு மாகாணத்துடன், கிழக்கு மாகாணத்தை இணைக்க விட மாட்டோம் என ஒரேயடியாக ஒதுக்குவது ஆரோக்கியமானதல்ல. இந்த விடயத்தில் பேச்சுக்கள், விட்டுக் கொடுப்புகள் இடம்பெற வேண்டும். அதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருக்கிறது” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவிக்கின்றமையும் கல்முனை சாய்ந்தமருது, வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபை போன்ற விடயத்தில் வாக்குறுதிகலுக்கு மேல் வாக்குறுதிகளிஅ தேர்தல் காலத்தில் தலைமையானது மேடைகளில் அள்ளி வீசுவது தேர்தலுக்கு பிற்பாடு கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் செய்வதும் கல்முனை தொகுதியில் அதிகளவிலான வாக்குகளை பெறும் ஹரிசுக்கு பாரிய தலையிடியினை கொடுத்திருக்கலாம்.
இதுவும் ஹரிஸ் தலைமையுடன் முரண்பட்டுக்கொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவும் இருக்கலாம். இந்த நிலையிலே இராஜினாமாச் செய்யப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது என்ற செய்தி வெளிவர ஆரம்பித்த பொழுது கல்முனை விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்படாத நிலையில் தனது இராஜாங்க அமைச்சைப் பொறுப்பெடுக்க முடியாது என ஹரிஸ் தீர்மானித்து அறிக்கை விட்டமை ஹக்கீமுக்கு பெரும் தலையிடியினை கொடுத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருதிருக்காது.
இவ்வாறு போனால் கல்முனை மட்டுமல்லாது ஹரிஸ் முழு அம்பாறையிலும் ஹீரோவாக கணிக்கப்பட்டு விடுவார் என்பதே ஹக்கீமுடைய சிந்தனையின் சாராம்சமாக இருந்திருக்கும். எது எவ்வாறாக இருந்தாலும் குறித்த அமைச்சுக்களை மீளவும் பொறுப்பெடுத்தல் குறித்து முஸ்லீம் சமூகத்தின் பொதுப்புத்தி விசனத்துடன் நோக்கும் ஹரிசுடைய முடிவு பெரிதும் அப்பிரதேச மக்களால் வரவேற்கப்பட்டது என்பதும் உண்மை.
குறிப்பாக கல்முனைத் தொகுதி மக்கள் பெருமைப்பட கூடிய முடிவாகவும் அது அமைந்திருந்தது.
இவ்வாறான நிலையில்தான் ஹக்கீம் தான் மட்டும் அமைச்சு பதவியினை பெற்று அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக தான் சென்றால்தான் கல்முனை விவகாரத்திற்கு தகுந்த தீர்வினை அரசாங்கத்துடனான பேசுவார்த்தையின் மூலம் பெற்றுக்கொடுக்கலாம் என்ற காரணங்களை ஹக்கீமின் ஆதரவான செய்திகளில் இருந்து வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால் ஹரிசுக்கும் ஹக்கீமுக்கும் இடையிலான முரண்பாடு நீண்டு கொண்டே போகும் என்பதும் சூடு பிடித்துள்ள தற்போதைய விவகாரத்தின் முடிவிலாவது இவர்களுடைய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா.? என்பதே பெரும் பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.