நாம் எப்பொழுதும் சிறந்த ஊடகவியலாளர்களாக இந்த நாட்டில் இருப்போமென்றால், எமக்கு இந்த நாட்டின் மிகச் சிறந்த பிரஜைகளாகவும் உருவாக முடியும்.
அத்துடன், இந்த நாடு சிறந்த நற்பிரஜையுள்ள நாடாக உருவாக வேண்டுமென்றால், ஐம்பது வீதமான உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருந்தால் போதும். 225 உறுப்பினர்கள் தான் பாராளுமன்றில் இருக்க வேண்டிய அவசியமில்லை என, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
வெயாங்கொடை - சான்ஸ் பெலஸ் ஹோட்டல் வரவேற்பு மண்டபத்தில், (18) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"சிறந்த ஊடகவியலாளர் சிறந்த பிரஜை" எனும் தலைப்பில் அமைச்சர் இங்கு உரை நிகழ்த்தினார். பிரபல அரச ஊடகங்கள் பலவற்றிலிருந்தும் இங்கு வந்திருந்த பிரதான அதிகாரிகள் பலரும் கருத்துரைகளை வழங்கினர். அமைச்சர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது,
நாம் சிறந்த ஊடகவியலாளர்களாக எப்பொழுதும் இருப்போமேயானால், நாட்டின் சிறந்த பிரஜைகளாகத் திகழ்வோம்.
அத்துடன், ஊடகவியலாளர்கள் எப்பொழுதும் பொறுப்புடனும் செயற்திறனுடனும் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் அவர்களுக்குள்ள இன்றைய மிகப்பெறும் தேவையும் கடப்பாடுமாகும்.
ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பூரண சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும். ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்திகளைச் சேகரிப்பதற்கான வழி முறைகளை, மிகச் சிறந்த முறையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
எமது நாட்டுக்கு கள்ளம் கபடமற்ற, ஊழல் மோசடிகளற்ற, பாதாள உலகக் கோஷ்டியைச் சேராத மற்றும் ஊடகவியலாளர்களைத் துன்புறுத்தாத தலைவர் ஒருவரே வேண்டும்.
எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு மேற்கொள்ளப்படும் தெரிவுகள் சரியானதாக அமைய வேண்டும்.
ஊடகவியலாளர்களின் மனச்சாட்சிக்கு துரோகம் விளைவிக்காத, அவர்களின் மனச்சாட்சிக்கு அமைய செயற்படும் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு பூரண சுதந்திரம் பெற்றுக் கொடுக்கும் சிறந்த தலைமைத்துவம் ஒன்று நமது நாட்டில் உருவாக வேண்டும். இந்நாட்டின் அடுத்த தலைவர் சிறந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்டவராகவும், மக்களின் துன்பங்களில் முழுமையாகப் பங்கு கொள்ளும் தலைவராகவும் இருத்தல் வேண்டும்.
ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் விமர்சனம் செய்யும்போது, விசேடமாக ஊடகவியலாளர்களைத் துன்புறுத்துபவர் எவரும் இந்நாட்டின் ஜனாதிபதியாக வர முடியாது. வரவும் கூடாது என்பதே எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பாகும் என்றார்.
