புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர்தரம் ஆகிய பரீட்சைகள், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி (ஞாயிறு) முதல் 31 ஆம் திகதி (சனி) வரை நடைபெறவுள்ளதால், இப் பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், டெங்குக் காய்ச்சல் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகமாகப் பதிவாகுவதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவ வைத்தியர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 29,000 க்கும் அதிகமானோர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டெங்குக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கும் வகையில் சிரமதானப் பணிகள், புகை விசிறும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, ஆகஸ்ட் மாதத்தில் புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. உயர்தரம் போன்ற பரீட்சைகள் இடம்பெறவுள்ளதால், குறித்த பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பிரதி வெள்ளிக்கிழமை தோறும் மாவட்டச் செயலகங்களில் சிரமதானப் பணிகளை மேற்கொள்ளுமாறு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் நிபுணத்துவ வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.