இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை, இணையத்தளம் மூலமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள சகல மாணவர்களின் அனுமதி அட்டைகளும் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் யாவும், ஏற்கெனவே பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனைத்து அனுமதி அட்டைகளும், அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், (25) வியாழக்கிழமை பரீட்சைகள் திணைக்களத்தின்
www.doenets.lk
எனும் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும் என்பதோடு, இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத பரீட்சார்த்திகள், அதனைப் பயன்படுத்த முடியுமென்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கமைய 337,704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ள நிலையில், இப் பரீட்சையானது ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.