பௌத்தர்களை பெரும்பனமையாகக் கொண்ட இந்நாட்டில் மரண தண்டனை வழங்கும் பொழுது ஆயிரம் முறை யோசிக்கிறார்கள், கடுமையான சர்வதேச அழுத்தங்களையும் பொருளாதார இழப்புக்களையும் தாண்டி போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றங்கள் முடிவெடுத்திருக்கும் நிலையில் அதனை நிறைவேற்ற ஜனாதிபதி கைச்சாத்திட்டிருக்கும் நிலையில் அதனை நிறைவேற்றுதல் தான் தர்மமாகும்.
இன்று இலங்கை மக்கள் எதிர் நோக்கியுள்ள மிகப் பெரும் சவாலாக போதைப் பொருள் பாவனை மாறி வருகிறது, தினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் எதிர்கால சந்ததியினரை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பாடசாலைகளில் ஆதிக்கம் செலுத்தும் போதைவஸ்து பாவனையை ஒழிக்க இந்தத் தண்டனை அமுலாக்கப் படுதல் காலத்தின் தேவையாகும்.
உலகலாவிய போதைவஸ்து கடத்தல் வலைப்பின்னலில் தங்க முக்கோணப் பிராந்தியத்தில் பிரதான மையப்புள்ளியாக இலங்கை இருக்கிறது , இலங்கை மட்டுமல்ல இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகளில் உள்ள கடத்தல் மன்னர்களும் இலங்கையில் சட்டத்தில் உள்ள போதாமையை பயன்படுத்திக் கொள்கிறார்கள். மத்தியகிழக்கு நாடுகளின் புலணாய்வுத் துறையினரும் கரிசனை கொண்டுள்ளனர்.
பத்வாக்கள் கொடுக்கும் பொழுது இத்தகைய பூகோல பிராந்திய களநிலவரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குற்றங்கள் நிகழாது அவற்றின் சகல வழிவகைகளும் தடை செயப்பப் பட்ட பின்னர் தான் அல்லது அதற்குரிய ஆன்மீக பண்பாட்டு பக்குவம் உள்ள சூழலில் தான் கடுமையான தண்டனைகள் அமுலாகும் என சிந்தனை எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் எல்லா சூழலிற்கும் பொருத்தமான வியாக்கியானமல்ல!
இந்த நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம், படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் மரண தண்டனையை மக்கள் வேண்டி நிற்கின்றனர், தீவிரவாத பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை கேட்டு நிற்கிறார்கள், ஆனால் பாகுபாடான நீதி அமுலாக்கம் என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு மிகவும் இறுக்கமான பொறிமுறைகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப் படுவதனை அதிமேதாவித் தனமாக எதிர்க்க வேண்டிய தேவை இல்லை.
மரணதண்டனையின் வாயிலை முற்றாக மூடிவிடாதீர்கள், சுமார் ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு சற்று திறக்கப்படுகிறது.
இந்த நாட்டில் நீதித்துறையில் பாகுபாடற்ற சட்ட அமுலாக்கத்தில் நம்பிக்கையில்லை என பெருமபன்மையான மக்கள் நம்பிக்கை இழந்திருந்தால் காட்டுத்தர்பார் தான் நடக்கின்றதென்றால் இந்த மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்ட பின்னர் இடம்பெறவுள்ள தேர்தல்களில் திருடர்களை ,கயவர்களை , வங்குரோத்து ,ஊழல் மோசடி பேர்வழிகளை அதிகாரத்திற்கு கொண்டுவராமல் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
கொல்லப் பட வேண்டியவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக அகப்படும் கூலிப்படைகளை விட்டுவைக்க முடியுமா? நாளை அதே பாதாள உலக கூலிப்படைகள் தான் பாராளுமன்றம் வரை வரப் போகிறார்கள்!
மரண தண்டனை யார்யாருக்கு விதிக்கப் படவேண்டும் என்ற பட்டியலை நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து இருக்கிறது, அதனை அமுல் நடத்த அரசு இருக்கிறது, சட்டத்தின் பிடியில் இருந்து பலர் தப்புகிறார்கள் என்றால் சட்டமும் ஒழுங்கும் நீதியும் அவசியமில்லை என்று ஆகிவிடுவதில்லை, கடுமையான சட்டங்கள் அமுலாக்கப் படுகின்ற பொழுதுதான் காலப் போக்கில் திரைமறைவில் இருக்கும் பக்காத் திருடர்களும் சட்டத்தின் முன் கொண்டுவரப் படுவார்கள்.
http://inamullah.net/?p=1979&fbclid=IwAR1kLwLlNKq9A_UE0Gw_pwAK0bzXNNdFvhxBHxy3sHZkkku8Aujk-OIi99Y
சொல்லப்படும் அரசியல் இராஜதந்திர, சட்ட அமுலாக்கல் காரணங்கள், மார்க்க விளக்கங்கள் எல்லாவற்றையும் உள்வாங்கிய பின்னரும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதனை தனிப்பட்டமுறையில் ஆதரிக்கின்றேன், அதுவே இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யம் மிகப் பெரிய உபகரமாகும், அதற்கு ஆதரவு வழங்காமல் இருப்பதுவே குற்றமாகும், பாவமாகும், உங்கள் சொந்தப் பிள்ளைகளை அன்புச் செல்வங்களை மனதில் இருத்தி மனச் சாட்சியை தொட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்!