சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 26 திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த வீட்டை திருத்தியமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்முனை இராணுவ படை முகாம் கட்டளை தளபதிகள் மேஜர் தர்மசேன தலைமையிலான இராணுவ அணி சென்று பார்வையிட்டுள்ளது.
இன்று (6) காலை குறித்த பகுதிக்கு சென்ற இராணுவத்தினர் சேதமடைந்த வீட்டின் பகுதிகளை புகைப்படம் எடுத்ததுடன் அதனை மீள அமைப்பதற்கான உத்தேச வரைவு ஒன்றினையும் செயற்படுத்தி துரித கதியில் பழைய நிலைக்கு அவ்வீட்டை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வீட்டை இராணுவத்தினர் திருத்தியமைக்க முன்வந்துள்ளமை தொடர்பாக அப்பகுதி மக்கள் இராணுவத்தினருக்கு பாராட்டி வரவேற்பு அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சாய்ந்தமருது வீட்டுத்தொகுதியில் ஷஹ்ரானின் குடும்பத்தினர் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட வேளை ஷஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) மற்றும் மகள் ருஸையா ஆகியோர் இருபது நிமிடங்கள் மலசல கூடத்தில் ஒளிந்திருந்தமையாலே உயிர்தப்பியதாக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த ஸஹ்ரானின் மனைவி மகள் ஆகியோரை இராணுவத்தினரே மீட்டு முன் வைத்திய சிகிச்சை மேற்கொண்டமை ஊடகங்களில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.