பாலமுனை சீட்ஸ் அமைப்பின் மாதாந்த ஒன்றுகூடலுக்கான களப்பயணமும் முழு நாள் தலைமைத்துவ செயலமர்வும் ஞாயிற்றுக்கிழமை (30) ஒலுவில் பரண் தோட்டத்தில் நடைபெற்றது.
சமூக பொருளாதார கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (சீட்ஸ்) தலைவரும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக திட்டமிடல் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜி. பஸ்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஜெய்ஸான், உளவளத் துணை உத்தியோகத்தர் ஏ. மனூஸ், விரிவுரையாளர் திரு பத்மராஜா, அமைப்பின் ஆலோசகர் எம்.எஸ்.எம். ஹனீபா, முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் கனி ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
மேலும், சீட்ஸ் அமைப்பின் தவிசாளர், அதிபர் பி. முஹாஜிரீன், பொறியியலாளர் எம்.எச். நௌசாத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜி. அஸ்மின், ஆசிரியர் எம்.எச். நிஸார்தீன், முகாமைத்துவ உதவியாளர்களான ஏ.எம். அதுஹான், கே.எல். ஹர்சான் உட்பட அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சீட்ஸ் அமைப்பின் உறுப்பினர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வில் தலைமைத்துவ ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் வகையிலான செய்முறைப் பிரயோக நிகழ்வுகளும் செயலமர்வுகளும் நடைபெற்றதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. மேலும், சீட்ஸ் அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் பற்றிய திட்டமிடல்களும் இங்கு நடைபெற்றன.
இந்நிகழ்வில் சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஜெய்ஸான் உரையாற்றுகையில்,
'சீட்ஸ் அமைப்பானது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முன்மாதிரியாக இயங்கி வருகின்ற ஒரு அமைப்பாகும். பாலமுனையை தளமாகக் கொண்டியங்கும் இவ்வமைப்பானது முழு அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் தமது பணிகளை விஸ்தரித்து மேற்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். அதற்கான தகைமையும் ஆளணியும் வளமும் சீட்ஸ் அமைப்பிடம் காணப்படுகின்றது. சீட்ஸ் அமைப்பானது எதிர்காலத்தில் தனது பணிகளை முன்னெடுத்துச் செல்ல என்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாறாக இருக்கிறேன்.
சமூகத்தில் பல்வேறு வகையான நலிவடைந்த தரப்பினர் காணப்படுகின்றனர். இவர்களை இனங்கண்டு எமக்கு முடியுமான பணிகளைச் செய்கின்றபோது அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி அலாதியானது. இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற ஒவ்வொரு துறைகளிலும் பல்வேறு தேவைகள் காணப்படுகின்றன. இதற்காக திட்டமிடப்பட்ட சிறிய சிறிய வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் சமூகம் பல முன்னேற்றங்களை அடைந்துகொள்ளும். இவ்வாறான ஒன்றுகூடலும் நிகழ்வுகளும் மனதிற்கு நிம்மதியையும் மனமகிழ்வையும் ஏற்படுத்துபவை. இதுபோன்ற தலைமைத்துவ செயலமர்வுகளை மேற்கொள்வதனூடாக எதிர்கால சமூகத்தின் தலைவர்களை வழிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்' எனத் தெரிவித்தார்.