கோர்ட்லோஜ் முனுசாமி ஆலயத்தில் அத்துமீறல் செய்பவர்கள் யாராயினும் சட்ட நடவடிக்கை! ஜனாதிபதி அறிவுறுத்தியதாக திலகர் எம். பி தெரிவிப்பு!!


நுவரலியா கோர்ட்லோஜ் தோட்ட முனுசாமி கோவில் விவகாரம் தொடர்பில் குறித்த தேர்ர் (பிக்கு) மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவத்துள்ளார்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் - ஜனாதிபதிக்கும் இடையிலான அவசர பேச்சுவார்த்தை 18-07-2019 திகதியன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்து கலாசார தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அமைச்சர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், வேலுகுமார், ஆகியோருடன் கலந்து கொண்டிருந்த நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்இடையிலான பேச்சுவார்த்தையில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்து ஆலயங்கள் மீதான பௌத்த தேரர்களின்அத்துமீறல்கள் குறித்து கலந்துரையாடினோம். அமைச்சர் மனோ கணேசன் கன்னியா மற்றும் நீராவியடி ஆலய விவகாரங்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் நீண்ட விளக்கத்தை அளித்தார். தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளரும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். இந்த பிரச்சினைகளுக்கு விசேட குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையின்படி எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுக்க உடன்பாடு காணப்பட்டது.

கன்னியா வெந்நீஷரூற்று பிரதேசத்திற்கு பொதுமக்களை அனுமதிப்பதனை யாராவது தடை செய்தால் அதனை உடனடியாக நிறுத்தி பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டார். அத்துடன் தொல்பொருள் திணைக்களத்தின் ஆலோசனை சபையில் இணைக்கப்பட்டுள்ள 32 பேரும் சிங்களவர்களாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அதில் குறைந்தது 5 தமிழ் இந்துக்களை இணைக்க வேண்டும் என விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.

இதன்போது மலையகத்தில் பரவலாக காணப்படும் சிறுதெய்வ வழிபாட்டு பாரம்பரியம் குறித்து நான் எடுத்துக் கூறியதோடு, நுவரலியா கந்தப்பளை கோர்ட்லொஜ் தோட்டத்தின் காவல் தெய்வமான முனுசாமி வழிபாட்டு இடத்தில் நேற்று (17ஃ07) பிரதேச பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த கொடியினை நாட்டி அத்துமீறல் செய்திருப்பதும் அதுபற்றி அந்த பிரதேச பிரதான விஹாரதிபதிக்கும் தெரியாது என்பதையும் கவனத்திற்கு கொண்டுவந்தேன்.
மலையக பிரதேசங்கள் தோறும் இத்தகைய சிறு தெய்வ வழிபாடுகள் யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் பரம்பரை பரம்பரையாக இடம்பெற்றுவருவதனையும் அவற்றில் இடையூறு செய்வது புதிய பிரச்சினைகளை தோற்றுவிப்பது இன நல்லிணக்கத்துக்கு பாதகமானது. நுவரலியா மாவட்டம் மத ரீதியான பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக உள்ளது. நானும் அமைச்சர் திகாம்பரமும் பல பௌத்த ஸ்தலங்களுக்கும் வேறு மத ஸ்தலங்களுக்கும் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளோம். குறித்த தேர்ருக்கு புதிய விகாரை அமைக்க தேவை இருப்பின் அதனை வேறு இடத்தில் அமைப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. அதற்கு நிதி உதவி தேவை எனில் எங்களிடம் கோரலாம். ஆனால் இப்போது அவர் செய்யும் அத்துமீறல் ஏற்றுக்கொள்ள முடியாதது என எமது நிலைப்பாட்டைத் தெரிவித்தோம்.
இதன்போது இந்த செயலுக்கு தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி இத்தகைய தேவையற்ற விவகாரங்களில் தலையிடுபவர்கள் யாராயினும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு உள்ள அதிகாரங்களை கொண்டு கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்க குழுவினர் உபதலைவர் என்றவகையில் நுவரலியா மாவட்ட செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன்.
விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் குமார் ஆகிய இருவரும் உத்தியோகபூர்வ பயணமாக வெளிநாடு சென்றிருப்பதன் காரணமாக இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரியவருகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -