அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியுதீன் பயங்கரவாதத்துடன் தொடர்பு பட்டுள்ளார் என்பது பற்றிய ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி பிரமுகர் முஸம்மில் ஊடகங்களில் கூறுவது இலங்கை புலனாய்வு பிரிவை அவமானப்படுத்துவதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது விடயமாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீட் இன்று (11) வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்ட அண்மைய ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு பட்ட அனைவரையும் கைது செய்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. தற்போது நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டு சிங்கள தீவிரவாதம் மட்டுமே மிச்சம் உள்ளது.
இவ்வாறு பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டோரை முழுமையாக கைது செய்ய அர்ப்பணிப்புடன் செயற்பட்டோர் இரண்டு பிரிவுகள்தான். அவை பாதுகாப்பு தரப்பும் அதற்கு பூரணமாக ஒத்துழைத்த முஸ்லிம் சமூகமும்தான்.
இந்த நிலையில் ரிசாத் பதியுதீன் சம்பந்தமான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் அவை பற்றி சி ஐ டியிடம் ஒப்படைக்கப்போவதாகவும் முஸம்மில் சொல்வதன் மூலம் நாட்டின் புலனாய்வுக்கு கூட தெரியாத ஆதாரம் இவருக்கு தெரிந்துள்ளது என்பதன் மூலம் புலனாய்வுத்துறையை இவர் அவமானப்படுத்தியுள்ளார். இதற்காக புலனாய்வுத்துறை இவரை விசாரிக்க வேண்டும்.
அமைச்சராக இருந்த தலைவர் ரிசாத் பதியுதீன் தன் மீதான குற்றச்சாட்டுக்கெதிராக தனது அமைச்சு பதவியை பயன்படுத்துகிறார் என கூறியே அத்துரலிய தேரர் உட்பட பல இனவாதிகள் கொக்கரித்தனர், உண்ணாவிரதம் இருந்தனர். அதனை தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீது திருவிழா நடத்துவோம் என்ற ஞானசார தேரரின் எச்சரிக்கை காரணமாகவும் கண்டியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாலும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் முஸ்லிம் சமூகத்தை காப்பதற்காக தம் பதவியை தியாகம் செய்து எம் அனைவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நிரூபியுங்கள் என கூறினர்.
அமைச்சர்கள் ராஜினாமா செய்து 10 நாட்கள் ஆகிவிட்டன. ஈஸ்டர் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகிவிட்டன. இருந்தும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புள்ளா மற்றும் ஆசாத் சாலி போன்றோர் மீதான பயங்கரவாத குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதன் மூலம் இவர்களுக்கெதிராக அரசியல்வாதிகளும், தேரர்களும், ஊடகங்களும், சில தமிழ் இனவாதிகளும் பொய்யையே கக்கியுள்ளனர் என தெரிகிறது.
இத்தகைய பொய்யின் தொடர்ச்சியே முஸம்மிலின் உளறல்களாகும்.
ஆகவே டொக்டர் ஷாபி மீது குற்றம் சாட்டிய 700க்கு மேற்பட்ட பெண்கள் இப்போது தம்மையும் தமது கணவருக்குத்தான் தாம் பிள்ளைகள் பெற்றார்களா என்பதையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கூறப்பட்ட போது 95 மீதமான பெண்கள் அதற்கு முடியாது என மறுத்திருப்பது போல் முஸம்மிலின் குற்றச்சாட்டும் இவ்வாறான கோமாளித்தனம்தான் என்பதும் இன்ஷால்லாஹ் வெளிவரும் என்ற நம்பிக்கை எமக்குண்டு என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.