முபாறக் அப்துல் மஜீத்-
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நடை பெற்ற முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதல் மற்றும் முக்கிய முஸ்லிம் தலைவர்களின் பதவிகளை குறிவைத்து உண்ணாவிரதம் என்ற பெயரில் முஸ்லிம் சமூகத்தை தாக்கி திருவிழா நடாத்த முயற்சித்த வேளை ராஜினாமா செய்வதாயின் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தை முதலில் முன் வைத்த முன்னாள் அமைச்சர் ஹரீஸ் அவர்களை நிச்சயம் சமூகம் நன்றியுடன் பார்க்கிறது.
உண்மையில் இக்கருத்தை அவர் முன் வைத்த போது அதனை உலமா கட்சியே முதலில் பகிரங்கமாக பாராட்டியது. அத்துடன் ஹரீஸ் எம். பியின் கருத்தை ஏற்று அனைத்து முஸ்லிம்களும் ராஜினாமா செய்தமை என்பது வரலாற்றில் ஓர் ஏடாகவும் பேரினவாதிகளுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்னுமொரு கட்சித்தலைவராக இருந்தும் அவர் மீது அநியாயமாக பழி போட்டு முஸ்லிம் சமூகத்தை தாக்குவதற்கு முயற்சி எடுத்த நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்தமையும் பாராட்டத்தக்க விடயமாகும்.
எம்மை பொறுத்த வரை எமக்கு மஹிந்தவோ, மைத்திரியோ, ஐ தே கவோ பெரிதல்ல, இந்த நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பும் நாட்டின் சமாதானமுமே பிரதானமாகும். அந்த வகையில் முஸ்லிம் சமூகத்துக்கு யார் மூலம் நன்மையோ அவரோடு நம் உரிமைகளை முன் வைத்து பேசுவதே சிறந்த அரசியலாகும். இதற்காக முஸ்லிம் எம் பீக்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாய் செயற்பட வேண்டும்.
இத்தகைய ஒற்றுமைப்பயணம் தொடர்ந்தும் வெற்றியளிக்க வேண்டும் என நாம் பிரார்த்திப்பதுடன் எதிர் காலத்தில் அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒற்றுமையாக செயற்படுவதற்குரிய பணியையும் சகோதரர் ஹரீஸ் எம் பி முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.