கல்முனை பிரச்சினையில் த.தே. கூட்டமைப்பின் நிலைப்பாடு ? முஸ்லிம்களின் சம்மதமின்றி தீர்வு சாத்தியப்படுமா ?
முஸ்லிம்களின் ஆதரவு இல்லாததனாலேயே தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியளிக்கவில்லை என்பது எல்லா தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.
தொடர்ந்து முஸ்லிம் மக்களை பகைத்துக்கொண்டால் எதிர்காலத்தில் தமிழர்களுக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வுத்திட்டமும் சாத்தியமற்ற ஒன்றாகிவிடும் என்பதனை பொறுப்புள்ள தமிழர்களின் பிரதிநிதி என்றவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நன்கறிவர்.
முஸ்லிம் தரப்பினர் தீர்வு திட்டத்தினை எதிர்த்தால் அதனை காரணம் கூறி சிங்கள தரப்பினர் சர்வதேச சமூகத்திடம் முஸ்லிம்களுக்காக முதலைக்கண்ணீர் வடித்து தீர்வுத்திட்டத்தை கைவிட்டு விடுவார்கள்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதற்காகத்தான் தமிழர்கள் இவ்வளவு காலமும் ஆயுதப் போராட்டம் நடாத்தவில்லை. அதனாலேயே முஸ்லிம் தரப்பினரை அரவணைத்தவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மிகவும் கவனமாக அரசியல் நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள்.
ஆனால் இன்று கல்முனையில் அதற்கு முற்றிலும் மாற்றமான சூழ்நிலையை காண்கிறோம். அதாவது தமிழ் தலைமைகளுடன் கலந்தாலோசிக்காமல் உள்ளூர் பிரமுகர்கள் சிலருடன் பௌத்த பிக்கு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
இந்த பிக்கு ஏன் திடீரென இந்த முடிவை எடுத்தார் ? இவரது நோக்கம் என்ன ? இவரை இயக்குபவர்கள் யார் ? தமிழர்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கும்போது மூன்றாம் நபரான பௌத்த பிக்குவுக்கு இதில் என்ன தேவை உள்ளது ? என்ற கேள்விகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பதில் தெரியாமலில்லை.
கடந்தகால கசப்புணர்வுகளை மறந்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் இருக்கின்ற இடைவெளிகளை அகற்றி இரண்டு சிறுபான்மை சமூகங்களும் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புடன் செயல்படுவதற்கு தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் முயற்சிக்கின்ற காலகட்டத்தில்,
மீண்டும் இரண்டு சிறுபான்மை சமூகங்களுக்கிடையில் நாடுதழுவிய ரீதியில் விரிசல்களை உண்டுபன்னி அதில் குளிர்காய்ந்துகொண்டு தென்னிலங்கை இனவாதிகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற எந்தவொரு பொறுப்புள்ள சமூகத் தலைமையும் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ் பேசும் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் எங்கே முரண்பாடுகள் உள்ளது என்று ஆராய்ந்து, அந்த இடத்தில் தென்னிலங்கை இனவாத சக்திகள் மூக்கை நுழைத்து தமிழர்களுக்கு உதவி செய்வதுபோன்று நடிக்கின்றார்கள்.
இதன் மூலம் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் உருவாக வேண்டும் என்று எதிர்பார்கின்றார்கள்.
தமிழ் மக்கள்மீது இவர்களுக்கு அக்கறை இருப்பது உண்மையென்றால், தீர்வு வழங்கா விட்டாலும் பருவாயில்லை. பல வருடங்களாக சிறையில் வாடுகின்ற தமிழ் கைதிகளை விடுவிப்பதற்காக போராட்டம் நடத்தட்டும். அதன்பின்பு இவர்களை நம்புவோம்.
ஆனால் தமிழ்மக்கள் மீது பாசம் இருப்பதுபோல் காண்பிப்பது வெறும் நடிப்பு என்பது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கு எதிராக வஞ்சகம் தீர்பதற்கு தமிழர்களை பயன்படுத்துகின்றார்கள் என்பதனை த.தே. கூட்டமைப்பினர் நன்கறிவர்.
விடுதலை போராட்டத்தை காட்டிக்கொடுத்த கருணா போன்ற சில சக்திகள் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிப்பதற்காக இப்படியான சந்தர்ப்பங்களை வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். இவர்களது சூழ்ச்சிகளை புரிந்துகொள்ளாத சில அப்பாவிகள் இதனை உண்மையென்று நம்புவதுதான் கவலையான விடயமாகும்.
எனவே தமிழ் – முஸ்லிம் மக்களின் அரசியல் தலைமைகள் பேச்சுவார்த்தை நடாத்தி அதில் உடன்பாடு காணப்படுவதுடன், எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு கல்முனை வடக்கு பிரதேசம் தரமுயர்த்தப்படல் வேண்டுமே தவிர, தென்னிலங்கை இனவாதிகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அல்ல. என்பதுதான் தமிழ் – முஸ்லிம் தலைமைகளின் எதிர்பார்ப்பாகும்.