மௌனம் காக்கும் மேலாண்மைவாதம்! ஐக்கியமே சமூக இருப்புக்கான மார்க்கம்.


சுஐப் .எம்.காசிம்-
ராணுவ யுத்திகளும்,ஆயுதப் பலமும் பயங்கரவாதத்தை மௌனிக்கச் செய்ததைப் போல், அரசியல் யுக்திகளும் இராஜதந்திர நகர்வுகளும் பேரினவாதத்தை மெளனம்காக்க வைத்துள்ளது.
பௌத்தர்களின் 2500 வருட கலாசாரங்கள் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால் ஏனைய நாகரீகங்கள் மற்றும் இனங்கள் தலைகுனிந்து வாழவேண்டும் என்று, கடும்போக்கு தேரவாதம் நினைக்கிறது. இந்தக் கடும்போக்கிற்குப் பின்னாலுள்ள சக்திகளை அடையாளம் காணும் வரை எமது நாட்டில் எதையும் சாதிக்க முடியாது.இவர்களுக்குப் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லைதான்.ஆனால் எத்தனை வீதமான பௌத்தர்கள் இவர்களை ஆதரிக்கின்றனர் என்பதற்கான அளவுகோல்களே இன்று தேவைப்படுகிறது.மேலாண்மைவாத தேரர்களின் கடும்போக்குகளையும் கட்புலனுக்குத் தென்படாத இவர்களின் சித்தாந்தங்களையும் எல்லாத் தேரர்களும் ஏற்கவில்லை என்ற ஏனைய இனத்தவர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்தும் வகையில் தென்னிலங்கைத் தளத்திலிருந்து எதிர்க்குரல்கள் வரவில்லையே.இவ்வாறு வராததாலும் கடும் போக்கர்களுக்குப் பின்னால் எத்தனை பௌத்தர்கள் உள்ளனர் என்பதை அளவிடுவதற்கான அளவுகோல் இல்லாததாலுமே கடும்போக்குப் பிழைக்கிறது.

எமது நாட்டின் இன்றைய நிலை எனக்கு எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான துக்ளக் ஷோவின் "அரசியல்வாதிகளும் மதவாதிகளும்" என்ற புத்தகத்தை ஞாபகமூட்டுகிறது. அரசியல்வாதிகளையும் விட, மதவாதிகள் அதிக இலாபமுடையவர்கள் என்ற கருத்தை அவர் முன்னிலைப்படுத்த, கையாண்டுள்ள முறைகள் கச்சிதமானவை.எவ்வித முதலீடுகளும் இல்லாமல் கொள்ளை இலாபமீட்டும் வர்த்தகர்களே மதவாதிகள் என்பதற்கான சான்றாதாரங்கள் மறைந்து கிடக்கும் அவரது நூலை,ஆழமாகவும்,அறிவார்த்தமாகவும் தேடிக்கிளறினாலேயே அவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.
ஏனைய சமூகங்களின் கலாசார அடையாளங்களை,கட்டுப்பாட்டுக்குள் வைத்து, இலங்கையின் அடையாளத்தைக் காப்பாற்ற, நினைக்கும் இந்தக் கடும்போக்குகள் பொதுவான அடையாளம் என்று எதைச் சொல்கிறார்கள் என்பது புரியவில்லை. கண்டியன் ஓசறிச்சேலை அணிவது பௌத்தர்களின் கலாசாரம் என்றால் எத்தனை பேர் அதை அணிகின்றனர்? தாவணி,வேட்டி,பூவும் பொட்டும் தமிழர்களின் கலாசாரம்.எங்கே இப்போது இவை? முஸ்லிம் பெண்களின் முந்தானை,முக்காடு,தொப்பி,தாடிகளை இலங்கையிலுள்ள இருபது இலட்சம் முஸ்லிம்களில் எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்.
பாராளுமன்றத்திலுள்ள சகல முஸ்லிம் எம்பிக்களும் சேர்ட்,கோர்ட்,ஷூ இவற்றைத்தானே அணிகின்றனர்.இலங்கைக்கான பொதுவான கலாசாரம் எதுவென யார் வரையறுப்பது.?காலவோட்டத்தில் நாகரீகம் மாறுவதால் சகலரதும் நடைமுறைகளும் மாறுகின்றன. ஆனால் மத நம்பிக்கைகள் கலாசாரப் பின்பற்றல்கள் மாறுவதில்லையே.டீசேர்ட்,டெனிம் காற்சட்டை அணிந்தாலும் தமிழ் பெண்கள் பூவையும் பொட்டையும் கைவிடவில்லை. இதேபோன்று முந்தானை முக்காடுகளிலிருந்து விலகிய முஸ்லிம் பெண்கள் ஹபாயா, ஹிஜாப்களை அணிகின்றனர்.இங்கே ஆடைகள் மாறுகின்றன ஆனால் ஆத்மீக நம்பிக்கைகள் மாறவில்லை.இந்த மாறுதல்களை பெருந் தன்மையுடன் ஏற்றுக் கொண்டாலே பன்முகத்தன்மை இலங்கையில் நிலைக்க முடியும் இல்லாவிடின் பிற கலாசாரங்கள் மீதான நெருக்குதல்களுக்கு மேலாண்மைவாதம் சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கும் அல்லது சந்தர்ப்பத்தை உருவாக்கும்.
இந்நிலையில் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் கடும் போக்கிற்கு கைகொடுத்துள்ளது. இதனாலே இத் தாக்குதலை இன்னுமொரு சமூகத்துடன் முடிச்சுப்போட்டுக் கொள்ளை இலாபமீட்ட மதவாதிகள் முயற்சிக்கின்றனர்.இல்லாவிட்டால் கண்டியில் உண்ணாவிரதமிருந்த அத்துரலிய தேரரைக் காப்பாற்ற அவசரகாலச் சட்டத்தையும் மீறி ஒரு படையே எவ்வாறு அணிதிரள முடியும்?. ஏனைய சமூகத்தை அச்சுறுத்தி மூலைக்குள் முடக்கிவிட்டு,மதவாதத்தை மட்டும் உயிரூட்டவா அவசரகாலச் சட்டம்?.சாத்தியமே இல்லாததை மருத்துவத் துறையுடன் முடிச்சுப்போடவா மதவாதம்?
சிறையிலிருந்து வௌியான தேரரின் இஸ்லாம் மீதான பார்வையும் குருநாகல் வைத்தியர் மீது புனையப்பட்டுள்ள மருத்துவக் குற்றச்சாட்டும் சர்வதேச தரத்திலிருந்து எமது தேசம் ஓரங்கட்டப் படும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.இந்த ஒரங்கட்டலுக்கு ஒத்து ஊதியது மேலாண்மைவாத தேரவாதமே.ஒன்றை மட்டும் புரிவதற்கு மேலாண்மைவாதம் தவறினால்,2500 வருடம் பழமையான பௌத்த நாகரிகம் உலகிலிருந்து தனிமைப்பட்டுவிடும்.குடத்துள் விளக்காய் இலங்கையின் மகிமை ஔிர்வதை விட விரிவெயிலில் விளக்கொளியாய் இருப்பதே சிறந்தது. இப்போதிருந்தே உலகம் குறிப்பாக இஸ்லாமிய நாடுகள் எமது தாய்நாட்டின் மீதான கருணைப் பார்வையை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் இலங்கையிலிருந்து வைத்தியர்களை வரவழைப்பதற்கு சில நாடுகளும் அஞ்சுகின்றன. முஸ்லிம் டொக்டர் மீது புனைந்துள்ள கட்புலனாகாத குற்றச்சாட்டுக்களால் சர்வதேச மருத்துவ சபையும் எமது நாட்டை ஏளனத்துடன் நோக்குகிறது.
இந்த ஏளனத்தையும் தனிமைப் படுத்தலையும் ஒரு ஒரு நொடிப்பொழுதில் விலக்கிக் கொள்ள முடியும். எமது நாட்டு மருத்துவ சபை இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து அல்லது மறுத்து ஓர் அறிக்கையிட்டால் எமக்கு ஏற்பட்டுள்ள இந்த ஏளனத்திலிருந்து நாம் மீளலாம்.ஏன் அறிக்கை விடவில்லை.இதற்குப்பின்னாலுள்ள அரசியல்வாதிகளுக்குள் மதவாதம் ஒழிந்துள்ளதே காரணம்.இஸ்லாமிய நம்பிக்கைகளை புரிய மறுக்கின்ற கடும் போக்கிற்கு இந்த அரசாங்கம் இடமளித்தால் முஸ்லிம்களுக்கு ஆட்சி எதற்கு அதிகாரம் எதற்கு.இந்தப்பின்புலமே முஸ்லிம்களைப் பதவி துறக்க வைத்திருக்கும்.
லகும்தீனுக்கும் வலியதீன்"உங்களுக்கு உமது மார்க்கம் எனக்கு எனது மார்க்கம்" என்ற இஸ்லாத்தின் உயரிய கோட்பாடு ஒவ்வொரு மதங்களின் தனிச்சிறப்புக்களுக்கும் சுதந்திரமளித்துள்ளது.இறைதூதர் முஹம்மது நபியர்வர்களின் மக்கா வாழ்க்கையில் அருளப்பட்ட இந்த இறைவசனம் குறைசியர்களின் மத நம்பிக்கைகள் இஸ்லாத்துக்குள் கலக்காமலும், இஸ்லாத்தின் மத நம்பிக்கைகள் குறைசியர்களின் மதத்துக்குள் கலக்காமலும் மதங்களின் தனிச் சிறப்புக்களுக்கு சுதந்திரமளித்துள்ளது.ஒரு மனிதனின் அறிவை அச்சுறுத்தி அவனது நாளாந்த செயற்பாடுகளை முடக்கி மதமாற்றுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை என்பதற்கு இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டியுள்ளது.
இஸ்லாம்,கிறிஸ்தவ மதங்களுக்கு பௌத்தர்கள் மாற்றப்படுவதைத் தடுக்க பௌத்த தேரவாதம் விழிப்படைய வேண்டும் என ஞானசாரர் ஏன் கூற வேண்டும்.ஆபத்தான கருத்துக்களை வௌியிட்டு ஏனைய மதத்தவரை பீதியில் உறைய வைப்பதா இவரின் நோக்கம். எனவே எடுத்த தீர்மானத்திலிருந்து முஸ்லிம் தலைமைகள் உறுதியாக இருக்க,எமது ஒற்றுமையே பலமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -