தற்கொலை குண்டுதாரியின் மனைவியை தாம் பார்க்க செல்லவில்லை - அப்பட்டமான பொய்யை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது - மன்சூர் எம்.பி தெரிவிப்பு


எஸ்.எம்.அறூஸ்-
“குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்றில் உள்ள பலரும் உறுதியாக உள்ளனர். இதன்போது மக்கள் குழம்பிக் கொள்ள தேவையில்லை”
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்படுகின்றமையும், அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ள நிலை கருதி இன்று (2) நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது,
ஒரு குழுவினரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமையான செயற்பாடுகளால் முழு முஸ்லிம்களையும் இந்த அரசு தீவிரவாதிகளாக பார்க்கவில்லை. கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் தீவிரவாதக் கும்பல்களை கண்டுபிடிப்பதற்காகவே இராணுவத்தினரும், பொலிஸாரும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறு சோதனைகள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் மன அச்சத்தினால் குர்ஆன், கிதாப்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை யாரும் எரிக்கவோ அழிக்கவோ தேவையில்லை.

இது எமது பதுகாப்பிற்கான சோதனையே அதன்போது நாம் ஒத்துழைப்பு வழங்குவதே முக்கியமானது. அதற்காக ஓடி ஒழிந்து பீதியில் மடியத் தேவையில்லை. மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
ஒரு சில இனவாதக் கும்பல்களின் அராஜாக செயற்பாட்டால் முழு முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். உண்மையிலே இது விடயம் கவலையளிக்கிறது. இவ்வாறான தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு அஞ்சி ஒரு போதும் எமது மதத்தின் அடிப்படை செயற்பாடுகளை யாரும் கைவிடாதீர்! தற்கொலைத்தாக்குதல் சம்பவத்தை நுறு வீத முஸ்லிம்களும் கண்டிப்பதுடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்டவர்களை இனம்காட்டியுள்ளனர்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்படுமாயின் அதற்காக குரல்கொடுக்க நானும் எமது முஸ்லிம் காங்கிரஸூம் தயாராக உள்ளோம். இந்நாட்டின் ஒற்றுமைக்கும், இன ஐக்கியத்திற்கும் முஸ்லிம் சமூகம் பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளது.
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர் எனது சாரதியாக இருந்தாலும் கூட பொலிஸார் அவர்களின் கடமையை தடையின்றி மேற்கொள்ள எவ்வித தலையீடுகளையும் மேற்கொள்ளாது உள்ளேன்.
பாழடைந்த காணியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களும், அருகில் சட்டரீதியாக வெடிபொருள் வைத்திருந்தவரின் வெடிபொருட்களையும் சேர்த்தே காட்டப்பட்டுள்ளது. பாழடைந்த காணியின் எதிர் வீடுதான் எனது சாரதியின் தாயாரின் வீடாகும். தனது தந்தைக்கு சுகமில்லை என்பதாலேயே தாய் வீட்டில் சாரதி இருந்துள்ளார்.உள்ளேன்.
நேற்று மதியம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சாரதி கடுமையான விசாரணைகளுக்குப் பிறகு இரவு சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளார். தனது வாக்கு மூலத்தில் தனக்கும் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தெவித்துள்ளார். அந்த வகையில் அவரது உண்தை்தண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என நம்புகின்றேன்.
இவ்வாறு விடயங்கள் இருக்கின்றபோது இனவாத ஊடகங்கள் என்னையும் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுகின்றது. இது மிகவும் கவலைக்குரியதாகும்.
அது மட்டுமல்லாது, சாய்ந்தமருதில் இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இறந்து போன பெண் மற்றும் காயமடைந்த பொதுமக்களை பார்வையிடுவதற்காகவும், ஜனாஸாவை கொண்டு வரும் செயற்பாட்டிற்காகவும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நண்பர் ஜெமீலின் அழைப்பின் பேரில் அம்பாரை வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன்.
அப்போது நோயாளர்களைப் பார்வையிடுவதற்கான நேரம் இன்னும் அரை மணித்தியாலயம் இருப்பதால் உரிய நேரத்திற்கு சென்று பார்வையிடுமாறு எமக்கு சொல்லப்பட்டது. அத்துடன் எம்மோடு வைத்தியசாலைக்கு வந்த சாய்ந்தமருது பொதுமக்களை பல கேள்விகளை கேட்டு சங்கடத்திற்குள் ஆளாக்கினர். நான் அந்த இடத்தில் அவர்கள் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தினேன். அப்போது பாராளுமன்ற உறுப்பினரான என்னைக்கூட வேறுவிதமாக பார்க்க முற்பட்டனர்.
இதன் காரணமாக வைத்தியாசலையைவிட்டு வெளியேறிவிட்டோம். சம்பவம் இப்படியிருக்க தற்கொலைத்தாக்குதலுடன் தொடர்புட்ட சஹ்ரானின் மனைவியைப் பார்க்கப் போனதாக அப்பட்டமான பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக எனது சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருகின்றேன்.
மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு ஆறுதல் கூறி வழமை நிலையைக் கொண்டு வருவது எனது பணியாகும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது அபாண்டங்களையும், பொய்களையும் சொல்லி தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்த இனவாத ஊடகள் சில முற்படுகின்றது.
நாம் அனைவரும் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். இது சமூகத்தின் மீதான பிரச்சினை இந் நேரத்தில் முழு நாட்டிலுமுள்ள அனைத்து முஸ்லிம்களும் அச்சத்தில் உள்ளனர். அவ்வாறு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் யார் குற்றவாளியானாலும் தண்டிக்கப்படல் வேண்டும், யார் தீவிரவாதியானாலும் அழிக்கப்படல் வேண்டும்.
அதே போன்று எமது பெண் பிள்ளைகளின் ஆடைகளில் கட்டுப்பாடுகள் சில நிறுவனங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.அதற்காக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்து உரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.
மேலும் சம்மாந்துறை பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது மக்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள்.நானும் வேறு எந்த பகுதிகளுக்கும் செல்லாது மக்களோடு மக்களாக நின்று அவர்களது சிரமங்களில் பங்கேற்று வருகின்றேன்.எனது மக்களை எவ்விதத்திலும் நான் இச்சந்தர்ப்பத்தில் கைவிட்டு எந்த ஒரு வெளி இடங்களுக்கும் செல்ல மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் பாதுகாப்பு தரப்பினரால் ஏற்பட்டால் என்னை அவசரமாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தற்போதுள்ள நிலைமையில் பொலிஸார் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு சோதனைகளுக்கு பிரதேச மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதன்மூலமே இவ்வாறான தீவிரவாத்தை முற்றாகத் துடைத்தெறிய முடியும் என தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -