அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் ஆடை விவகாரம்? -சட்டத்தரணி பைஸர்


ற்போது வெளியிடப்பட்டு நடைமுறையில் உள்ள 2120/5ம் இலக்க 22.04.2019 திகதிய அவசரகால ஒழுங்குவிதிகள், அதன் பின்னனியில் பிரசுரிக்கப்பட்ட 2121/1ம் இலக்க 29.04.2019 திகதிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல், குறித்த இவ்வறிவித்தலுக்கு கொண்டுவரப்பட்ட 2123/4ம் இலக்க 13.05.2019 திகதிய திருத்திய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் என்பவற்றில் முகத்தை மூடும் ஆடைகள் சம்பந்தமாக பின்பற்றவேண்டிய நடைமுறைகள் வழிகாட்டப்பட்டுள்ளது.

2121/1(29.04.2019) திகதிய வர்த்தமானி அறிவித்தலின் விதி-32அ(1)(அ) வின் படி, ஆள் எவரும் முழு முகத்தையும் மறைக்கும் படியான ஏதாவது ஆடை, துணி,அதனை ஒத்த வேறு பொருட்கள் கொண்டு ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதை தடைசெய்யும் வகையில் ஏதாவது பொது(ஏதாவது பொது வீதி,ஏதாவது கட்டிடம்,ஏதாவது திறந்த அல்லது மூடிய இடங்கள்,எதாவது வாகனம் அல்லது வேறு ஏதாவது வகையில் அமைந்த போக்குவரத்து ஒழுங்குகள்) இடத்தில் முழுமுகத்தையும் மறைக்கும் படி ஆடைகள் அணிய முடியாது.
குறித்த வர்த்தமானியின் படி முழு முகம் என்பது ஒரு நபரின் காது உட்பட என்பதையும் குறிக்கும்.அதாவது காதினையும் மறைக்க முடியாது என்றே அர்த்தப்படும். மேற்படி ஒழுங்குவிதிகளுக்கு முரண்பாடாக செயற்படுபவர்கள் அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு முரண்பாடாக நடந்தவர் என்ற வகையில் நடவடிக்கைக்கு உட்படுவார்.

மேற்படி நிலைமை அவ்வாறு இருக்கும் போது 13.05.2019ம் திகதிய 2123/4ம் இலக்க அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் திருத்தப்பட்டவாறான ஒழுங்குவிதி-(3)(அ) வின் படி, மேற்படி முகத்தை மறைக்கும் விடயத்தில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடையினை அணிதல் ஆகாது என்பதோடு அவ்வாறு அணிந்தால் அதற்கு யார்? எப்படி? நடவடிக்கை எடுக்க முடியும் என தெளிவூட்டப்பட்டுள்ளது.
ஆயின், எவ்வாறாயினும், இலங்கைத் தரைப்படையின், இலங்கைக் கடற்படையின், இலங்கை வான்படையின் உறுப்பினரொருவர், பொலிசு அலுவலரொருவர் அல்லது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உறுப்பினரொருவர், அத்தகைய ஆளை அடையாளங் காண்பதற்கு இலங்கைத் தரைப்படையின், இலங்கைக் கடற்படையின், இலங்கை வான்படையின் அத்தகைய உறுப்பினரை, பொலிசு அலுவலரை அல்லது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உறுப்பினரை இயலச்செய்யும் வகையில் அவ்வாளினால் அணியப்பட்டதும் காதுகளுட்பட அத்தகைய ஆளின் முழுமுகத்தையும் மறைக்கின்றதுமான அத்தகைய தைத்த ஆடையை, துணியை அல்லது வேறு பொருளை அகற்றும்படி அத்தகைய ஆளைத் தேவைப்படுத்தலாம்.
திருத்திய இவ்விதியின் கீழ் முழுமுகம் என்பது காதினை மறைப்பதை தடை செய்யவில்லை அதாவது முன்னர் வெளியிடப்பட்ட 2121/1 வர்த்தமானியின் கீழான ''முழுமுகம்'' என்னும் சொல்லமைப்பின் வரைவிலக்கணம் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் முழுமுகம் என்பதற்கு புதிய வரைவிலக்கணம் கூறப்பட்டுள்ளது. எனவே தற்போது குறித்த ''முழுமுகம்'' என்பது, நெற்றியின் உச்சியிலிருந்து நாடியின் அடிவரையும் காதுகளுக்கிடையேயும் (ஆனால் அவற்றை உள்ளடக்காமல்) ஆளொருவரின் முழுமுகமும் என்று பொருளாகும் கூறப்பட்டடுள்ளது அதாவது காதுகளை மூடிய நிலையில் முகத்தை மேற்படி விதிகளின் படி திறந்தவாறான வகையில் ஹிஜாப் அல்லது வேறு ஒருவகையில் அமைந்த துணியால் தலையை மறைக்க முடியும்.
மேற்படி திருத்திய வர்த்தமானி அறிவித்தலில் புதிதாக ஒரு விடயம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும் அதாவது முழுமுகத்தையும் மறைக்கும் படி ஆடை அணிந்தால் யார் அதனை சோதனை இடலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே அரச நிறுவனங்களில் கடமையில் இருக்கும் ஊழியர்களுக்கோ அல்லது தனியார் பாதுகாப்பு ஊழியர்களுக்கோ அல்லது தனிநபர் யாருக்கோ குறித்த ஒழுங்குவிதியின் கீழ் ஆள்அடையாளத்தை பரிசோதிக்க அதிகாரமளிக்கப்படவில்லை.மேலும் அவ்வாறாயின் முகம் முழுவதும் மூடப்பட்டால்(அதாவது புர்கா மற்றும் நிகாப் அணிந்தால்) மாத்திரமே குறித்த நபர்கள் மேற்படி அதிகாரமளிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரின் உதவிகொண்டு நடவடிக்கை எடுக்க முடியும். அத்தோடு கழுத்துக்கு கீழ் அணியும் எந்த ஆடையையும் இவ்விதியோ அல்லது எவ்விதியோ தடை செய்யவில்லை. கழுத்துக்கு கீழ் அணியும் அனைத்து ஆடைகளும் ஒருவரின் உடலை பூரணமாக மறைப்பதாகவே காணப்படுகின்றது. அவ்வாறாயின் கழுத்துக்கு கீழ் அணியும் அனைத்து ஆடைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையுமா என்ற கேள்வி எழுகின்றது.அவ்வாறாயின் கழுத்துக்கு கீழ் அணியும் எத்தகைய ஆடையும் அணியாத நிலை தோன்றிவிடலாம.
எனவே சட்டத்தின் ஏற்பாடுகளை விளக்கம் இன்றி கையில் எடுப்பவர்கள் பற்றி தெளிவாக இவ்வேற்பாடுகளை சுட்டிக்காட்டி தெளிவூட்ட வேண்டியது எமது கடமை.அதனால் மேற்படி வர்த்தமானி அறிவித்தல்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் இலவசமாக பிரதி எடுத்து வழங்குங்கள்.மேலும் இஸ்லாமிய பெண்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் குறித்த பிரதிகளை தங்கள் கைவசம் வைத்து உங்களின் ஆடை விடயத்தில் சட்டமுரணான தலையீடுகள் செய்பவர்களுக்கு கனிவான முறையில் தெளிவுபடுத்துங்கள்.
மேற்படி விடயம் பற்றி தெளிவற்று தொடர்ந்து முரண்பட்டால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுங்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, அருகில் உள்ள பொலிஸ் அதிகாரி மற்றும் உங்கள் ஊரில் உள்ள சட்டத்தரணிகள் ஆகியோரை அணுகி மேற்கொண்டு நடவடிக்கை எடுங்கள்.மேலும் குறித்த விடயம் தொடர்பில் இலங்கையில் உள்ள 56ம் இலக்க 2007ம் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சட்டங்களின் கீழ் குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். அத்தோடு தற்போது நடைமுறையில் உள்ள அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழும் குறித்த ஆடை விடயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேற்படி விடயங்களை கையாளும் போது நாட்டின் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பை வழங்கி உங்கள் ஊர் பிரமுகர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுங்கள்.
ஆடைவிவகாரம் எமது நாட்டின் தாய் சட்டத்தினால் அடிப்படை உரிமையின் கீழ் வலுவூட்டப்பட்டு சகல சமூகத்தினரும் கௌரவமாகவும்,கண்ணியமாகவும் வாழ உத்தரவாதமளிக்கப்பட்ட விடயம் அவசரகால விதிகளின் கீழ் அவ்வேற்பாடு தற்காலிகமாக தடுக்கப்பட்டிருப்பினும் குறித்த அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழும் அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து அதனை நாம் சரியாகவும் நிதானமாகவும் பயன்படுத்துவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -