காரைதீவு தவிசாளருக்கு பழையவை மறந்து விட்டது : பிரதி தவிசாளர் ஜாஹீர் கண்டனம் தெரிவிப்பு !


நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி தனது கடந்தகாலத்தை மறந்து தன்னை நல்லவர் போல காட்ட முனைவது உண்மையில் பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டி விட்டதாக நினைப்பது போன்றே உள்ளது.

காரைதீவை சுற்றி மூன்று முஸ்லிம் ஊர்கள் இருக்கிறது அதனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்களது மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக கூறியிருக்கும் அவர் இரண்டு நாட்கள் மட்டுமே நடந்த சம்பவங்களை பற்றி பேசுவதுடன் கடந்த 30 வருடங்களாக நாட்டில் நடந்தவை தெரியாமல் கோமாவில் இருந்திருப்பதை எண்ணி நான் கவலைப்படுகிறேன். என காரைதீவு பிரதேச சபையின் பிரதித்தவிசாளரும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு முஸ்லிம் பிரதேச அமைப்பாளருமான ஏ.எம். ஜாஹீர் தனது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில் தெரிவித்தார். மேலும் பேசிய அவர்

கடற்கரை வீதியால் போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அந்த வீதியில் இருக்கும் உப பொலிஸ் நிலையம் மற்றும் கடல் படை தளம் என்பன கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது அவரின் முட்டாள் தனத்தின் உச்சமே. போதைப்பொருள் நடமாட்டம் இருப்பதை அறிந்திருந்த காரைதீவு பிரதேசத்தின் ஆட்சியாளராக இருக்கும் தவிசாளர் காரைதீவு கிராம சேவக எல்லைகளில் அமையப்பெற்றிக்கும் அந்த காவல் அரங்களுக்கு ஏன் அவர் அறிவிக்கவில்லை? அந்த போதைவஸ்து முகவர்களுடன் அவருக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? என சந்தேகிக்க முடிகிறது.
சில காட்டுமிராண்டி மிருகங்கள் முஸ்லிம் பிரதேசத்தில் இருந்துகொண்டு நாட்டை சீரழிக்க திட்டம் இட்டபோது இந்த நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு தரப்புக்கு அவர்கள் பற்றிய தகவல்களை வழங்கியது அப்பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் பொதுமக்களே என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து நிதிகொடுத்து நாட்டை சின்னாபின்னமாக்கும் எந்த ஒரு செயலையும் முஸ்லிங்கள் இதுவரை செய்ததாக வரலாறுகள் இல்லை இனியும் நடக்காது என்பதை இப்படியான இனவாத கருத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பாதுகாப்பு படைக்கு நிகரான நாட்டு பற்று மிக்க முஸ்லிங்கள் வாழும் மூன்று கிராமங்கள் காரைதீவை சுற்றி இருப்பது காரைதீவு மக்களுக்கு பாதுகாப்பு என்பதை தவிசாளர் அறிந்து கொள்ள வேண்டும். தியாக உணர்வு கொண்ட இலங்கை பாதுகாப்பு படையை குறைகூறிக்கொண்டு சகோதரத்துவத்துடன் வாழும் முஸ்லீம் -தமிழ் மக்களின் உறவை சீரழித்து இனவாத,மதவாத சாயம் பூசி அரசியல் இலாபம் அடைய அவர்கள் போடும் திட்டம் இந்த பிரதேச எந்த மத மக்களிடமும் பலிக்காது என்பதுதான் உண்மை.

இந்த நாட்டின் அரசியல்,பொருளாதாரம்,ஒற்றுமை,இறைமைகள் அழிக்கப்பட காரணமாக அமைந்தவர்களின் முகவர் போன்று இயங்கிவரும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் முஸ்லிம் சமூகத்தின் மீது சேறுபூசும் விதமாக விரல் நீட்ட அணுவளவும் தகுதி இல்லாதவரே.
கடந்த காலங்களில் தமது சொத்துக்களை பறித்துவிட்டு 500 ரூபாயுடன் லட்சக்கணக்கான முஸ்லிங்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை மறந்து விட்டீர்களா ? இல்லை காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த முஸ்லீம் அப்பாவிகளை கொன்று குவித்தவர்கள் யார் என்பதை மறந்து விட்டீர்களா ? அருந்தலாவையில் மத போதகர்களை கொன்று குவித்த அவர்கள்தான் சாய்ந்தமருது சந்தையில் குண்டை வெடிக்க செய்தார்கள் என்பது காலம் சொல்லும் இரத்த வரலாறுகள். இவற்றையெல்லாம் செய்தவர்களை நீங்கள் தியாகி பட்டம் கொடுத்து பேசிவிட்டு சிறிய ஒரு அமைப்பு செய்த ஈன செயலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிங்களையும் தீவிரவாதி போன்று பேசுகிறீர்கள். ஆனால் பல்லாயிர கணக்கான அப்பாவி உயிர்களை பலிகொடுத்தும், சொத்து சேதங்கள் இழந்தும் எப்போதுமே ஒட்டுமொத்த தமிழர்களை முஸ்லிங்கள் தீவிரவாதிகளாக விரல் நீட்டியதில்லை.

பிரதி அமைச்சை பறித்து விட்டு கௌரவ விஜயகலாவுக்கு இராஜாங்க அமைச்சு கொடுக்கப்பட்ட அரசியலின் அரிச்சுவடியே தெரியாத ஒருவரை அந்த மக்கள் தேர்ந்தெடுத்ததை எண்ணி வெட்கப்படும் காலம் கனிந்து வருகிறது. கௌரவ கிழக்கு ஆளுநரை பற்றி பேச அணுவளவும் தகுதி தராதரம் அற்ற காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அறிவை வளர்த்து கொள்ள அரசியலை படிக்க முன்னர் முதலில் பாடசாலை கல்வியையும்,மத போதனைகளையும் கற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.


கிழக்கில் உருவாக்கப்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழகமான .வெட்டி கேம்பஸ் எனும் அந்த தனியார் பல்கலைக்கழகம் பற்றி எந்தவித அறிவும் இல்லாது அவர் முட்டாள் போன்று பேசி பிரபலம் தேட முனைந்திருப்பது வேடிக்கையே, அனுமதி இன்றி இஸ்லாமிய பல்கலைகழகம் கட்டுவதாக கிழக்கு ஆளுநர் கௌரவ கலாநிதி எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் மீது குற்றம் சொல்லும் காரைதீவு தவிசாளர் கிணற்று தவளையை விட மோசமானவர். அந்த பல்கலை பற்றி சாய்ந்தமருதில் வைத்து இந்த நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி தெளிவாக கூறியிருக்கிறார். அனுமதி இன்றி கட்ட அது ஒன்றும் சிறிய கழிவறை கட்டிடம் இல்லை. ஒரு பிரமாண்ட தனியார் பல்கலைகழகம்.
ஒரு ஊடகம் மட்டுமே இதுசம்பந்தமாக பேசுவதாகவும் ஏனைய ஊடகங்கள் அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் அந்த ஊடகத்தின் இயல்பை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.எ. சுமந்திர எம்பியிடம் கேட்டால் சொல்வார். என கூறி வைக்க விரும்புகிறேன். கிழக்கு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருவதாக அவர் கூறியிருக்கும் அந்த கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எமது மக்களே அந்த தீவிரவாதிகளை அழிக்க முன்னின்று செயற்பட்டவர்கள் என்பதை இனவாதம் பேசும் காரைதீவு தவிசாளர் அறிந்து கொள்ள வேண்டும்.

பல்லின சமூகமும் பின்னிப்பிணைந்து வாழும் காரைதீவு மண்ணுக்கு ஆளுமை எனும் சாமான் மருந்துக்கும் இல்லாத ஒருவரை தவிசாளராக நியமித்திருப்பதை எண்ணி கற்றறிந்த காரைதீவு மக்கள் கவலையில் உள்ளனர். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த விபுல மண்ணின் கல்வி,இலக்கிய,நல்லொழுக்க ஜாம்பவான்கள் வாழும் காரைதீவில் இப்படியான ஒருவரை மக்கள் நிராகரிக்க வேண்டியது காலத்தின் தேவையாக உணரப்படுகிறது.
தமிழ் சகோதரர்கள் கடுமையாக நடத்த பட்டதாகவும், முஸ்லிங்கள் அப்படி நடத்தப்பட்ட வில்லை என்றும் தெரிவித்திருப்பது உண்மையில் வேடிக்கையே, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் தூக்கத்தில் புலம்பும் குழந்தையாக மாறி தேர்தல் நாடகம் போடுகிறார். முதலில் கனவுகள் கண்டுகொண்டு பேசாமல் தூக்கத்தில் இருந்து விழித்து நாட்டில் நடப்பதை நன்றாக அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் அத்துடன் இனிவரும் காலங்களில் முஸ்லிங்களை இனவாதியாக கைநீட்டுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என தனது உரையில் காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் கேட்டுக்கொண்டார்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -