சாய்ந்தமருது பிரதேசத்தில் தோடம்பழ அணியினரின் காட்டுத்தர்பார் அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் அனுமதிக்க மாட்டாது என அக்கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என தடை விதிப்பதற்கு பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபாவுக்கு அதிகாரம் வழங்கியது யார் என்றும் பிர்தௌஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று புதன்கிழமை (13) தனது சாய்ந்தமருது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
"சாய்ந்தமருது பிரதேசத்தின் அரசியல் கலாசார நிலைமை இன்று மிகவும் கவலைக்குரியதாக மாறியிருக்கிறது. அபிவிருத்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு எனது வீட்டில் அரசியல் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தோடம்பழ சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் இருவர் தலைமையில் எனது வீடு தாக்கப்பட்டது. இக்காட்சி சி.சி.டி.வி.கமராவில் பதிவாகியுள்ளது. அதேபோன்று அக்கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் வாகனமும் உடைக்கப்பட்டது.
இந்த வன்முறைகளை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா நியாயப்படுத்தி ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது கருத்து எமது சாய்ந்தமருது சமூகத்தை ஒட்டுமொத்தமாக தலைகுனியச் செய்துள்ளது. நீண்ட காலமாக கட்டிக்காக்கப்பட்டு வந்த எமது ஊரின் நாகரீக, பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர் வன்முறைகளை ஊக்குவிக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. எமது முஸ்லிம் காங்கிரஸ், சாய்ந்தமருதில் குழப்பங்களை ஏற்படுத்த முனைவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கருத்துக்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். நாம் அமைதியாகவே எமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். பள்ளிவாசல் தலைமையிலான தோடம்பழ சுயேட்சைக் குழுவினரே எம்மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
கடந்த வருடம் நடைபெற்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்து, காட்டுத்தர்பார் அரசியலை செய்தே சுமார் 13500 வாக்குகளை அவர்கள் பெற்றுக் கொண்டனர். அவற்றுள் சுமார் 4500 கள்ள வாக்குகளாகும். தேர்தல் அதிகாரிகளை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து வைத்துக் கொண்டே அவர்கள் வாக்குப் பெட்டிகளை நிரப்பியிருந்தனர். அதற்கு மத்தியிலும் சுமார் 2500 வாக்குகளை பெற்றுக் கொண்டோம். அப்போது எனது வீடும் எமது கட்சியின் ஏனைய சில வேட்பாளர்களின் வீடுகளும் உடைமைகளும் அவர்களால் தாக்கப்பட்டன. கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நாம் அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.
அடுத்த தேர்தலை இலக்கு வைத்து அவ்வாறான ஒரு அசாதாரண நிலைமையை தொடர்ந்தும் வைத்திருக்கவே அவர்கள் முயற்சிக்கின்றனர். அதன் காரணமாகவே எமது முஸ்லிம் காங்கிரசின் அரசியல் செயற்பாடுகளையும் இப்பிரதேசத்திற்கான அபிவிருத்தி பணிகளையும் முடக்குவதற்கு எத்தனிக்கின்றனர். இவர்களது காடைத்தனங்களுக்கு அஞ்சி ஒருபோதும் ஊர் மக்களுக்கான சேவைகளில் இருந்து நாம் பின்வாங்க மாட்டோம்.
பள்ளிவாசலை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி சபைக்கான போராட்டத்திற்கே மக்கள் இதுவரை ஆதரவு வழங்கி வந்தனர். ஆனால் இப்போது மக்களுக்கு உண்மை நிலைவரம் புரிந்து வருகிறது. உள்ளூராட்சி சபை போராட்டத்தின் பெயரால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் பித்தலாட்டங்களை மக்கள் அறிந்து வருகின்றனர். சாய்ந்தமருது பள்ளிவாசல் மரைக்காயர்கள் பலரும் தோடம்பழ அணியினரின் பித்தலாட்டங்களைக் கண்டு அதிருப்தியும் கவலையும் அடைந்துள்ளனர். ஆனால் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா மாத்திரம் இப்பித்தலாட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பக்க துணையாக இருந்து வருவது தொடர்பில் எமக்கு பாரிய சந்தேகம் ஏற்படுகிறது.
அரசியல் கட்சிகள் சாய்ந்தமருத்துக்குள் வரக்கூடாது என்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் கூறுவதற்கு வை.எம்.ஹனிபாவுக்கு அதிகாரம் வழங்கியது யார் என கேட்க விரும்புகின்றோம். உள்ளூராட்சி சபைக்கான சாகத்வீக போராட்டம் நியாயமானது. அந்த சபையை பெறுவதற்கு நாமும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அதை வைத்து மேற்கொள்ளப்படும் காட்டுத்தர்பார் அரசியலுக்கு இடமளிக்க முடியாது. இவ்வாறான வன்முறைகள் காரணமாக உள்ளூராட்சி சபையை பெற்றுக் கொள்வதென்பது இன்னும் தாமதமடையவே செய்யும்.
இவர்களுக்கு எதிராக கடந்த தேர்தல் காலத்தில் பொலிஸாரினால் தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இனிவரும் காலங்களில் இவர்களது காட்டுமிராண்டித்தனங்களை கட்டுப்படுத்துவதற்கு தனிப்பட்ட முறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் நாம் நேரடியாக ஈடுபடுவோம்" என்றார்.