மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியின் வேண்டுகோளுக்கிணங்க களுத்துறை மாவட்ட களுத்துறை, மத்துகம, கொரண வலய முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அதிபர்களால் அறிக்கை சமர்ப்பிப்பு .
மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியின் வேண்டுகோளுக்கிணங்க களுத்துறை மாவட்ட களுத்துறை, மத்துகம, கொரண வலய முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அதிபர்களால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியின் வேண்டுகோளுக்கிணங்க வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஏற்பாட்டில், களுத்துறை மாவட்ட களுத்துறை, மத்துகம, கொரண வலய முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டு அண்மையில் இடம்பெற்ற ஆளுநருடனான கூட்டத்தில் களுத்துறை மாவட்ட பாடசாலை அதிபர்கள் 7 பேரை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இக்குழு இன்று (06) மக்கொன அல்- ஹுசைனியா பாடசாலையில் கூடி தங்கள் பாடசாலைகளில் நிலவும் பெளதிக வளப் பற்றாக்குறைகள் ஆசிரியர் வெற்றிடம், வகுப்பறை குறைபாடுகள், தளபாடப் பற்றாக்குறை, வகுப்பறைக் கட்டிடங்கள் பற்றாக்குறை, கணினி கூடப் பற்றாக்குறை, மலசல கூடப் பற்றாக்குறை போன்ற பல குறைபாடுகளை ஆராய்ந்ததுடன் அதன் தொகுப்பை உடனடியாக மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியிடமும் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனூடாக மேல்மாகாண முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் பற்றாக்குறைகளை உடனடியாக நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்த செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மேல் மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆளுநர் அஸாத் ஸாலி அவர்கள் அதிபர்களுடனான கூட்டத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் இந்த செயற்பாடு மூலம் மேல் மாகாண பாடசாலைகளில் நீண்ட காலமாக நிலவும் குறைபாடுகள் விரைவில் நிவர்த்திக்கப்பட்டு கல்வி வளர்ச்சி ஏற்படும் என அதிபர்கள் நம்பிக்கை தெரிவிப்பதோடு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் படியும் அவர்கள் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
