கல்முனை பிரதேச செயலகமும் கரையான் காலத்து சண்டையும்


ஹுதா உமர் -
ல்முனையானது இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள கரையோர நகரங்களுள் ஒன்று. இது கிழக்கு பக்கம் கடலையும் மேற்கு பக்கம் நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவையும் வடக்கே களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பிரிவையும் தெற்கே சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவையும் கொண்டுள்ளது. இங்கே முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், பறங்கியர் என நான்கு இன மக்களும் வாழ்கின்றனர்.
இனவாத போராட்டத்தில் உருவான அசாதாரண சூழ்நிலையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இருந்து தமிழ் மக்களுக்கான சேவையை மக்கள் எந்தவித கஷ்டங்களுமில்லாமல் பெற வேண்டும் என்பதனை இலக்காக கொண்டு ஆயுதமுனையில் தோற்றம் பெற்ற கல்முனை உப பிரதேச செயலகம் இன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகம் , கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என பல்வேறு பெயர்கள் கொண்டு தமிழ் தரப்பினால் அழைக்கப்படுகிறது. ஆனால் முஸ்லிம் தரப்பு இந்த பெயர்களை அங்கீகரிக்கவில்லை. இப்போது
தமிழ் தரப்பு கூறுவது போன்று கல்முனை தமிழ் அல்லது கல்முனை வடக்கு பிரதேச செயலகமாகவே அது இயங்குகிறது. அந்த பிரதேச செயலாளர் தமது உத்தியோக பூர்வ பதவி முத்திரை தொடக்கம் கடித்தலைப்புக்கள்
எல்லாமே கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்றே அச்சிடப்படுகிறது. பிரதேச செயலாளர் கூட உப பிரதேச செயலாளர் என்று பாவிப்பதில்லை அவரும் தனது உத்தியோக பூர்வ முத்திரையில் பிரதேச செயலாளராகவே ஒப்பமிடுகிறார். இலங்கை சனநாயக குடியரசின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்திலும் இந்த செயலகத்தை கல்முனை பிரதேச செயலகம் (தமிழ்) என்றே அடையாளப்படுத்தி இருக்கிறது. அதையும் தாண்டி குறித்த செயலகத்திற்க்கு என இலங்கை அரசினால் அபிவிருத்தி குழு நியமிக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் கதை இருக்கும் போது
இலங்கையின் 2019 ஆம் ஆண்டின் வரவுசெலவு அறிக்கையின் வெற்றி- தோல்வியை தீர்மானிக்கும் அளவுக்கு இந்த விடயம் மாறியிருக்கிறது. இரு சமூகங்களும் உடையாமல் தீர்க்க முடியாத பாரிய சிக்கல்களில் ஒன்றாக இது விஸ்பரூபம் எடுத்துள்ளது என்றால் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இதன் மூலம் இலங்கை அரசின் தலைவர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை எல்லோருக்கும் பாரிய தலையிடியாகவும் இது மாறியிருக்கிறது.

'கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் ஒரு சதி நடவடிக்கை போலவே புலப்படுகிறது. அதுமட்டுமல்ல இன முரண்பாட்டை தோற்றுவித்து அதன்மூலம்; அப்பாவி முஸ்லிம் மக்களின் அரசியல் ஆதரவினைப் பெற முயற்சிக்கும் ஒரு தந்திரோபாயத் திட்டம் என்று கூட எண்ணத் தோன்றுகின்றது' என தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் அரசியல் வாதிகளும் தமிழர்களிடம் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.
கல்முனை மண்ணை கபழீகரம் செய்யும் தமிழ் அரசியல் சக்திகள் கல்முனை என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டினத்தை கூறுபோட்டு அதன் முகத்தை சிதைத்து அழித்துவிட 1950 களிலிருந்தே பகிரதப்பிரயத்தனம் செய்து வருவதை கடந்தகால வரலாறுகள் நினைவு கூறுகின்றன. அப்போதைய முஸ்லிம் அரசியல் தலைமைகள் போராடி நமது இருப்பைப் பலப்படுத்தினர்.கல்முனை செயலகத்தை இரண்டாக கூறு போட்டு, நகரை ஊடறுத்து அல்லது கடற்கரைபள்ளி வீதியால் எல்லை போட்டு கல்முனையை கொன்று அவர்களது இனவாத அரசியல் பசிக்கு தீனிபோட 1987 முதல் முயன்று வருகின்றார்கள்.என்பது காலம் கடந்தும் வாழும் உண்மையாக இருக்கிறது.
நீண்டகாலமாக சர்சைக்குரிய விடயமாக இருந்துவரும் கல்முனை உப பிரதேச செயலகம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேசியிருக்கின்றோம். இவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகண்ட பின்னரே இது சாத்தியமாகும்.இரு பிரதேச செயலக பிரிவுக்குள் இருக்கின்ற சமூகத்தினர் இரு வேறாக தனித்தனியே பிரிந்துசெல்வது திருப்திகரமான விடயமாகத் தெரியவில்லை. தனியே ஒரு சமூகம் மாத்திரம் பிரதேச செயலகம் ஒன்றுக்குள் இன ரீதியாக உள்வாங்கப்பட வேண்டும் என்பது சாத்தியமான விடயமல்ல. என அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.
தேர்தல்கள் நெருங்கும் போது தமிழர்கள் தனி பிரதேச செயலகமென்று ஆக்ரோஷமாக கோசமிடும் போது உணர்வுள்ள கல்முனை புத்திஜீவிகள் ஒன்று சேர்ந்து அரசியல் தலைவர்களையும், கட்சி தலைமைகளையும் கல்முனை மண்ணில் வாழும் பாராளுமன்ற பிரதிநிதி H.M.M. ஹரீஸ் அவர்களையும் சந்திப்பதும் அவர்களிடம் முறையிட்டு உணவு பரிமாறுவதும் பின் உரிய அமைச்சர்களை சந்தித்து மன்றாடி தற்காலியமாக இந்த பிரச்சினையை நிறுத்துவதுமாக தொடர்ந்தும் முதலுதவியையே செய்து வந்துள்ளனர்.
அதேவேளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் கோடீஸ்வரன் அவர்கள் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை கடும் விமர்சன தொனியில் குற்றம் சாட்டி பேசினார். கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தலையிட ஹரீஸ் யார் எனும் கேள்வியை கூட அவர் முன்வைத்து பேசிய விடயம் இங்கு ஆச்சரியமாகவும் அரசியலின் உச்ச அறியாமையையும் காட்டி நிற்கிறது. இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தனது பிரதேசம் சார்ந்த விவகாரங்களில் கரிசணை காட்டவேண்டியது அவரது தார்மீகப் பொறுப்பு. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அமைச்சின் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு அவர், இந்த விடயத்தை கையாண்டு வருகிறார். என்பது சகலரும் அறிந்த ஒரு விடயமே
இந்த விவகாரம் தொடர்பில் மாவட்ட செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் பேசுவதுடன், இப்பிரதேச மக்களின் நன்மதிப்பை பெற்ற பல முக்கிய கட்சிகள் மத்தியிலும் கலந்துரையாடப்பட வேண்டும். இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டால் மாத்திரம்தான் இந்த விடயம் சாத்தியமாகும் என்பது எதார்த்தமான ஒரு கருத்தாக இருக்க
'அரசியல் செல்வாக்கை வளர்க்க வேண்டும் என்று நினைத்து இனங்களுக்கிடையில் பகையுணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளை விடுவதையோ அல்லது பேசுவதையோ தயவு செய்து சகல தரப்பினரும் தவிர்த்து, தாங்கள் சார்ந்த மக்களுக்கு வேண்டிய நல்ல சேவைகளைச் செய்வது சாலச் சிறந்தது. கல்முனை உப பிரதேச செயலகத்தை கல்முனை தமிழ் பிரதேச செயலகமாக தரம் உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கைக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் கௌரவ அமைச்சர் மனோ கணேசன் வரைக்கும் அண்மையில் சென்றுள்ளதன் மூலம் தமிழ் தரப்பு இந்த விடயத்தில் எந்த எல்லையை வேண்டுமானாலும் எந்த நபரை வேண்டுமென்றாலும் தொடுவதற்க்கு தயாராகி விட்டார்கள் என்பது தெளிவாகிறது.
இலங்கையின் சட்டப்படி இன ரீதியான பிரதேச செயலகம் அமைக்க முடியாது என்பது நன்றாக அறிந்த சட்டத்தரணிகள் அதிகம் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயத்தில் உடும்புப்பிடி பிடித்திருப்பது உள்ளுராட்சி அலகொன்றை பெற விதை போடுகிறது என்பதை சிந்திக்க தெரிந்த எல்லோரும் நன்றாக அறிவர். இந்த விடயத்தில் முஸ்லிம் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் தமது அரசியல் இனவாத தீயை மக்கள் மீது செலுத்தி மக்களை மட்டையர்களாக்கி நமது ஆசனங்களின் காலத்தை நீடிக்க போட்ட நீண்டகால திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். என்பதையும் மக்கள் அறியாமல் இல்லை.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இன்று நிம்மதியாக சந்தோசமாக சகோதரத்துவத்துடன் இங்கு வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் எந்தவிதமான விரிசல்களுமில்லை. திறந்த மனதுடன்தான் வாழ்கின்றனர். இந்நிலையில் கல்முனையை பிரித்தால் முரண்பாடு வலுக்கும் என எச்சரிக்கும் அரசியல்வாதிகளின் செய்திகளைப் பார்த்து அதிர்ந்து போனோம். காரணம் இவர்கள் யாரை எச்சரிக்கின்றார்கள்? ஏன் எதற்காக எச்சரிக்கை விட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
உண்மையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் நியாயமான கோரிக்கை என்னவென்றால் ஏற்கனவே உப தமிழ் பிரதேச செயலகமாக நீண்ட காலமாக தனித்தியங்கும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தி அதனூடாக அரச சேவையினை விரிவுபடுத்தி மக்கள் துரிதமான சேவையைப் பெறவேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காகவே தனித்தமிழ் பிரதேச செயலகம் என்ற நிர்வாக கட்டமைப்பை எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கத்திற்காக மட்டுமே ஒருசில முஸ்லிம்- தமிழ் அரசியல்வாதிகள் இத்திட்டத்தினை எதிர்ப்பது போன்று ஒரு நடவடிக்கையினை ஏற்படுத்தி அதனூடாக அவர்கள் சார்ந்த மக்களிடம் செல்வாக்கைப் பெற முயற்சிக்கின்றனர். எனவே தயவு செய்து தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரிக்கும் சதியில் அரசியல்வாதிகள் ஈடுபடுவதனை எந்தச்சமுகமும் இனிமேல் ஏற்றுக்கொள்ளாது. அதே போன்று எந்தச் சதியிலும் எமது இரு இனமக்களும் சிக்கமாட்டார்கள் என்பதனையும் தெளிவாகப் புரிந்து கொண்டால் மிக நன்று.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் கரையோர மாவட்டம் கேட்கின்றனர். எந்த தமிழ் கட்சிகளோ அல்லது தமிழ் மக்களோ இதுவிடயமாக எதுவித எதிர்கருத்தும் வெளியிட்டார்களா? இல்லையே. அதேபோன்று மட்டக்களப்பு மத்தி என்று தனி முஸ்லிம் பாடசாலைகளை மையப்படுத்தி அமையப்பெற்றுள்ள மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் என்று எந்த தமிழ் அரசியல்வாதிகளோ அமைப்புக்களோ எதிர் கருத்துககளைக் கூறித் தடுக்க நினைத்தார்களா? இல்லையே. ஏன் நீங்கள் தமிழ் பிரதேச செயலகம் ஒன்று உருவாவதை தடைசெய்ய எத்தனிக்கின்றீர்கள்? இதனால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் தீமைதான் என்ன? என தமிழ் தரப்பு கேட்கும் கேள்விக்கு முஸ்லிம் தரப்பு பதிலளிக்க வேண்டிய கடமை இல்லாமலும் இல்லை.
எனவே தயவுசெய்து இப்படியான இனவிரோத கருத்துக்களைக் கூறும் அரசியல் தலைவர்களே தயவு செய்து தமிழ்- முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு மக்களிற்கு நல்லவை நடக்க தங்களின் ஆதரவை வழங்குங்கள் அதுதான் நல்ல அரசியல்வாதிகளின் பண்பாடாகும்'

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -