கல்முனையில் திண்மக்கழிவகற்றல் சேவைக்கு வருடாந்தம் 72 மில்லியன் செலவு..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற திண்மக்கழிவகற்றல் சேவைக்கு வருடாந்தம் ஏழு கோடியே இருபது இலட்சம் (72 மில்லியன்) ரூபா செலவு செய்யப்படுகின்றது. இச்செலவை ஓரளவு ஈடுசெய்வதற்கு வர்த்தர்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களின் உரிமையாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை (17) மாலை மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றபோது தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு முதல்வர் மேலும் கூறுகையில்;
"கல்முனை மாநகர சபை எல்லைக்குள் தினசரி 80 தொண் குப்பைகள் சேர்கின்றன. இவற்றுள் பெரும்பகுதி குப்பைகள் மாநகர சபையினால் சேகரித்து அகற்றப்படுகின்றன. இதற்காக நாளாந்தம் சுமார் இரண்டு இலட்சம் ரூபா செலவாகின்றது. இதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வதுமில்லை, மக்களிடம் குப்பை வரி அறவிடப்படுவதுமில்லை. பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொலிஸ் நிலையம் மற்றும் படை முகாம்கள் உட்பட அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் குப்பைகளையும் இலவசமாகவே சேகரித்து அகற்றுகின்றோம்.
ஹோட்டல்களில் சேர்கின்ற குப்பைகளே அதிகமாகும். சிலவேளை ஓரிரு ஹோட்டல்களில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகளினால் திண்மக்கழிவகற்றல் வாகனம் முழுமையாக நிரம்பி விடுகின்றது. இதனால் ஏனைய குப்பைகள் தேங்குகின்ற நிலைமையும் ஏற்படுகின்றது.
மாநகர சபையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில், அதன் சொந்த வருமானத்தில் பெரும்பகுதியானது திண்மக்கழிவகற்றல் சேவைக்கே செலவழிக்கப்படுகின்றது. இதனால் ஏனைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
எமது கல்முனை மாநகர சபை எல்லைக்குள் குப்பை கொட்டுவதற்கென்று ஓர் இடமில்லை. அதனால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டிலேயே குப்பைகளை கொட்டுகின்றோம். இதற்காக எமது வாகனங்கள் சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் சென்று வர வேண்டியுள்ளது. அப்பிரதேச சபைக்கும் நிறையளவுக்கு கட்டணம் செலுத்தி வருகின்றோம். தின்மக்கழிவகற்றல் பணிக்காக அதிக செலவு ஏற்படுவதற்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தின்மக்கழிவகற்றல் சேவைக்கான வரிகளை கல்முனை மாநகர சபை ஏன் அறவிடுவதில்லை என்று மாகாண ஆளுநர் மற்றும் கணக்காய்வு திணைக்கள தரப்புகளில் இருந்து கேள்விகளும் அழுத்தங்களும் மாநகர சபை நிர்வாத்திற்கு அதிகரித்துள்ளன.
அண்மையில் குப்பை வரி தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பிரகாரம் எமது மாநகர சபையினால் சேகரிக்கப்படும் ஒரு கிலோ குப்பைக்கு ஐந்து ரூபா வீதம் சேவைக் கட்டணம் அறவிட வேண்டியுள்ளது. இதற்கு ஹோட்டல்களின் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்" என்று முதல்வர் றகீப் கேட்டுக் கொண்டார்.
இதன்போது கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஹோட்டல்களில் அன்றாடம் சேர்கின்ற திண்மக் கழிவுகளை சேகரித்து அகற்றும் சேவையை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றின் உரிமையாளர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தமது ஹோட்டல்களில் சேகரிக்கப்படும் குப்பைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ஐந்து ரூபா வீதம் சேவைக்கட்டணம் செலுத்துவதற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் இதன்போது இணக்கம் தெரிவித்ததுடன் குப்பை அகற்றும் சேவையை மேம்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்றும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் உட்பட சுகாதார மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -