மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம்!
ஊடகப்பிரிவுஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-
"எங்களை செய்ய விடுகின்றார்களும் இல்லை , தாமும் செய்கின்றார்கள் இல்லை" இவ்வாறு மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன் மற்றும் பிரசித்தா ஆகியோரே இவ்வாறு தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெள்ளாங்குளம்,தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்று அந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை கேட்டறிந்த போது, அங்கு உரையாற்றிய இந்த பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்களின் பல்வேறு பிரச்சினைகளை எடுத்து கூறியதோடு அமைச்சர் மேற்கொண்டு வரும் சேவைகளுக்கும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.
"எங்களது கோரிக்கையை ஏற்று எமது பிரச்சினைகளை தீர்க்க என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் முடிந்தளவு செய்து தருகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சேவைகளை சில சக்திகள் தடுக்க முனைகின்ற. அவர்களும் எதையும் செய்து தராமல் செய்பவர்களையும் செய்ய விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். அவ்வாறானால் இந்த மக்களை என்ன செய்ய அவர்கள் சொல்கின்றார்கள் . எத்தனை தடை வந்தாலும் அவற்றை எல்லாம் மீறி அமைச்சருடன் இணைந்து எமது பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
போராட்டத்தில் நாங்களும் ஈடு பட்டவர்களே. பல்வேறு துன்பங்களை சந்தித்திருக்கின்றோம் . வவுனியா மெனிக் பாமில் நாம் தஞ்சம் அடைந்திருந்த போது அமைச்சரின் சேவைகளையும் அவரின் மனோ பாவத்தையும் நேரில் அறிந்தவர்கள் நாம். அதனால் தான் அவருடன் இணைந்து பயணிக்கின்றோம். அதன் வெளிப்பாடே மாந்தை மேற்கு பிரதேச சபையில் ஆட்காட்டி வெளி வட்டாரத்தில் அமைச்சரின் கட்சி சார்பில் வெற்றி பெற்று மக்கள் பணியில் ஈடுபட வைத்தது." இவ்வாறு மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஆடிக்காட்டி வெளி வட்டாரத்தின் உறுப்பினர் நந்தன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் வெள்ளாங்குள வட்டார உறுப்பினரான தேவன்பிட்டியை சேர்ந்த பிரசித்தா இங்கு கருத்து தெரிவித்த போது;
"போரின் உக்கிரத்தினால் இடம்பெயர்ந்திருந்த காலங்களில் நாங்கள் நிறையவே துன்பங்களை அனுபவித்திருக்கின்றோம் . எனது சகோதரர் ஒருவர் போராட்ட காலங்களில் காணாமல் போய், இன்று வரை காணாது தவித்துக்கொண்டிருக்கின்றோம் . என்னைப்போன்று பலர் இவ்வாறு கஷ்டப்படுகின்றனர் .துன்பப்பட்டவர்களுக்கே அதன் வலி தெரியும். 2010 ஆம் ஆண்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாம் சந்தித்ததன் பின்னரே அவரைப்பற்றி அறிந்து கொண்டோம் . நாங்கள் விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டு எமது தேவைகளை நிறைவேற்றி தந்தவர். இப்போதும் எமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார். தொடர்ந்தும் அமைச்சருக்கு எமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம் . தேவன்பிட்டி மட்டுமன்றி அயலில் உள்ள கிராமங்களான மூன்றாம்பிட்டி , பாலியாறு , கணேசபுரம் போன்ற அயற்கிராமங்களுக்கும் அமைச்சரின் உதவியுடன் எமது பணிகளை விரிவுபடுத்துவோம் என்றார்.
கிராமத்தின் முக்கியஸ்தரான அன்டனி கருத்து தெரிவிக்கையில் ;
மன்னார் மாவட்டத்தில் தேவன்பிட்டி உதை பந்தாட்ட அணி திறமை வாய்ந்த ஒன்று. எனினும் இந்த கிராமத்தில் வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு முறையான விளையாட்டு மைதானம் இல்லாத குறை உள்ளது . சிறிய மழை பெய்தாலும் மைதானம் வெள்ளமாகிவிடுகின்றது.
முன்னர் இங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு படகுகள் வழங்கப்பட்டன. இன்னும் படகுகளின் தேவை இருக்கின்றது. எட்டு மீனவர் சங்கங்களை உள்ளடக்கிய கடற்தொழிலாளர்கள் அமைப்பு இந்த பிரதேசத்தில் இயங்குகின்றது. மீனவர்களுக்கான கடற்தொழில் உபகரண உதவித்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், தேவன்பிட்டி கிராம மக்களுக்கு சொந்தமான வெள்ளாங்குளத்தில் இருக்கும் காணிகள் தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வருகின்றது. இந்த பிரச்சினை தொடர்பில் நாம் உங்களின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டுவந்த போது, நீங்கள் சில முயற்சிகளை மேற்கொண்டதை நாம் அறிவோம். இப்போது மனித உரிமை ஆணைக்குழு வரை இந்த பிரச்சினை சென்றுள்ளதால், இதனை எப்படியாவது தீர்த்துவைக்க உதவுமாறு நாம் வேண்டுகின்றோம்.
அண்மைய உள்ளூராட்சி தேர்தலில் வெள்ளாங்குள வட்டாரத்தை சேர்ந்த பல கிராமங்களில் உள்ள மக்கள் உங்களது கட்சிக்கு அமோக ஆதரவை வழங்கி எமது வேட்பாளரான பிரசித்தாவை கூடிய வாக்குகளுடன் வெற்றிபெற செய்துள்ளனர் என்றார்.
"இந்த பிரதேசத்தில் வீட்டுத்திட்டங்களை வழங்கும் போது அந்த வீடுகளுக்கான காணியின் விஸ்தீரணம் 20 பேர்ச்சிற்குள் மட்டுப்படுத்தப்படுகின்றது. நகரப்புறங்களிலும் காணி இல்லாத இடங்களிலும் இவ்வாறான மட்டுப்பாடுகள் இருப்பது நியாயமே .எனினும் போதியளவு காணிகள் உள்ள எமது பிரதேசங்களில் காணிகளை வழங்கும் போது பிரதேச செயலகங்களுக்கு ஏன் இந்த கஞ்சத்தனம் வரவேண்டும் ? " என்று தெரிவித்த அவர், இந்த பிரதேசத்தில் எங்களால் முன்வைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் பல தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதற்காக அமைச்சருக்கு மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்தார். அத்துடன் தேவன் பிட்டி ஆலயத்தின் நிர்மாணப்பணிகளுக்கு ஏற்கனவே அமைச்சரால் சில உதவிகள் கிடைத்த போதும் இந்த ஆலயத்தை கட்டி முடிப்பதற்காக அமைச்சர் மேலும் காத்திரமான பங்களிப்பை நல்க வேண்டும் . எனவும் குறிப்பிட்டார்.
"இங்கு உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது மிகுந்த சவால்களுக்கு மத்தியிலே வெள்ளாங்குள வட்டாரத்தில் எமது கட்சியின் பிரதிநிதியை வெல்லச்செய்வதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றேன். அவருடைய வெற்றியே இந்த பிரதேசத்தை நாம் திரும்பி பார்ப்பதற்கு உந்துகோலாக அமைந்துள்ளது. நீங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை திட்டமிட்டு தீர்த்து தரும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள். தற்போது வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள காணிகளை துப்பரவாக்குவதற்கு நாம் நிதி உதவியளித்தோம். அதுமாத்திரமன்றி இன்னும் சில வாரங்களில் பலவேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. வாழ்வாதாரத்திற்கென நீங்கள் தந்த பட்டியலின் படி விரைவில் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச சபை தலைவர் செல்லத்தம்பு , மன்னார் பிரதேச சபை தலைவர் முஜாஹிர், இரணைதீவு பங்குத்தந்தை, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் ,பிரதேச சபை உறுப்பினர்களான பெருமாள் , இராசைய்யா, பகீரதன்,பாடசாலை அதிபர் தேசிய இளைஞர் சேவை பணிப்பாளர் முனவ்வர் உட்பட பலர் பங்கேற்றனர்.