தேசியமும், சர்வதேசமும் முஸ்லிம் சமூகத்தை ஒரு பங்கரவாதிகளாக முத்திரை குத்துமளவுக்கு நாங்கள் ஒருபோதும் நடந்து விடக்கூடாது என்று விவசாய , நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு அமைச்சர் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வும், கௌரவிப்பும் (01) ம் திகதி பள்ளிவாசல் தலைவர் ஏ.எல்.அலியார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
அண்மையில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் மாவனெல்லையில் சில புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட விடயமும், அதனோடு சேர்ந்து பதின்மூன்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட விடயத்தையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதனுடைய சம்பவங்களை நாங்கள் விசாரித்துச் பார்க்கின்ற போது அதிலே உண்மையான செய்தியாகத்தான் அவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள். இதைப் பொறுத்தவரையில் வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வாழுகின்ற மூன்றில் இரண்டு மடங்கு முஸ்லிம்களுக்கு ஒரு ஆபத்தான விடயமாகும். இந்த விவகாரத்தில் கைதானவர்கள் அச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று தன்னிச்சையாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள்.
எனவே தேசியமும், சர்வதேசமும் எங்களை இலங்கையிலும் ஒரு பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துமளவுக்கு நாங்கள் நடந்து கொள்ளக் கூடாது இந்த விடயத்தில் பள்ளிவாசல்களும், அரபுக் கல்லூரிகளும் விழிப்பாக இருக்க வேண்டியவொரு தேவைப்பாடு மிக அவசியமாகா தேவைப்படுகிறது.
அரசாங்கத்துடைய பார்வை பள்ளிவாசல்கள் மீதும் அரபுக் கலாசாலைகள் மீதும் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றவொரு நிலை காணப்படுவதை நாம் அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
எனவே இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் உம்மத்திற்கு மிகவும் தெளிவான பார்வை இல்லையென்று சொன்னால் எங்களுக்குள் பாரிய பிரச்சினைகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தி ஒரு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்துகின்ற ஒரு கட்டம் கூட ஏற்படலாமென்று நாங்கள் அஞ்சுகின்றோம்.
எனவே நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரதேசத்திலே இவ்வாறான நிகழ்வுகள் வருமாக இருந்தால் இந்தப் பிரதேசத்திலே நாங்கள் நிம்மதியாக வாழ முடியாதவொரு சூழ்நிலை ஏற்பட்டுப் போகும் எனும் விடயத்தை இந்தப் பள்ளிவாசலில் வைத்து சொல்ல வேண்டியவொரு தேவைப்பாடு எனக்கு இருக்கிறது. இதிலே மிகவும் விழிப்பாக எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் பார்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயத் தேவை என்றார்.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், மீராவோடை மேற்கு வட்டாரக்குழுத் தலைவரும் அமைச்சரின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் மற்றும் உலமாக்கள், ஊர் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.