ஐ. ஏ. காதிர் கான்-
கொழும்பு - டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 ஆவது தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தரம்மிக்க வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் யாவும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்று, மா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு நகரத்தில் தற்போது தடைப்பட்டுள்ள வீடுகளை இழந்த மக்களுக்கு சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு - டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 ஆவது தோட்டத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற தைப்பொங்கல் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்ப்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் இங்கு பேசும்போது,
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல், 2015 ஆம் ஆண்டு வரையில், கொழும்பு நகர மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் மாத்திரம் அமைக்கப்பட்டன என்றும் சுட்டிக்காட்டினார்.
அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வைபவம் தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில்,
சிங்கள மக்களின் புத்தரிசி விழாவுக்கு அமைவாக இது அமைந்திருந்தது.
இதனால் இன, மத ரீதியில் பல்வேறு விதத்தில் பிளவுபடாமல் இருப்பதற்கு கலாச்சாரங்கள் ஒன்றிணைகின்றன. இவ்வாறான முறையில் கலாச்சாரங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
இந்தத் தோட்டத்தில் மிகவும் பழைமையான வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்றி, புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு, அரச நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது இதற்கான அடிப்படைப் பணிகள் மாத்திரமே இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் இந்த நிகழ்வின் போது அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், மிக விரைவில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, பொதுமக்களுக்கான மிகச்சிறந்த தரம்மிக்க வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று, இதன்போது உறுதியளித்தார்.