- சுதந்திர கட்சியின் காரைதீவு அமைப்பாளர் மூர்த்தி
எஸ்.அஷ்ரப்கான்-முஸ்லிம் இளைஞர்கள் 07 பேரின் விடுதலைக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்து வருகின்ற முன்னெடுப்புகள், முயற்சிகள் ஆகியவற்றில் நூறில் ஒரு பங்கைத்தானும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தமிழ் மக்களின் ஏக தலைமை என்று சொல்லி கொள்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுப்பதாக இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இவரின் காரைதீவு இல்லத்தில் இன்று (31) வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
முஸ்லிம் தலைமைகளின் அரசியல் வழிமுறை எப்போதும் வேகமானதாகவும், விவேகமானதாகவும் இருந்து வருகின்றது. உரிமைக்கான அரசியல், அபிவிருத்திக்கான அரசியல் ஆகிய இரண்டையும் பேரம் பேசும் சக்தி மூலமாக கச்சிதமாகவும், வெற்றிகரமாகவும் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பால் உரிமைக்கான அரசியலிலும் சரி, அபிவிருத்திக்கான அரசியலிலும் சரி எமது மக்களுக்கு உருப்படியான எந்த நன்மையையும் பெற்று கொடுக்க முடியாமலேயே தொடர்ந்து உள்ளது.
கிரலகல புராதன தூபியில் ஏறி படம் பிடித்து சமூக இணைப்பு தளத்தில் பதிவேற்றிய தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதி ஆண்டு முஸ்லிம் மாணவர்கள் 07 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. இவர்கள் இதய சுத்தியுடன் இச்செயற்பாட்டில் ஈடுபட்டு உள்ளமையை காண முடிகின்றது. அரசாங்கமும் இவர்களின் குரலுக்கு செவி சாய்கின்ற நிலைதான் காணப்படுகின்றது. இம்மாணவர்களின் விடுதலை வெகுவிரைவில் இடம்பெறும் என்று தோன்றுகின்றது.
ஆனால் கடந்த பல வருட காலமாக தொடர்ந்தேச்சையாக சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டு உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எட்டா கனியாகவே தெரிகின்றது. இவர்களுக்கு மன்னிப்பும், விடுதலையும் பெற்று கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்படுவதாக தெரியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்ப்பதாகவும் விளங்கவில்லை. இந்த அரசாங்கத்தை தாங்கி பிடிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது, நினைத்தால் 24 மணித்தியாலங்களுக்குள் அரசாங்கத்தை ஆட்சி பீடத்தில் இருந்து இறக்குவார்கள் என்று இக்கூட்டமைப்பின் தலைகள் முழங்கி வருகின்ற போதிலும் எந்த பயனும் இல்லை என்பதே யதார்த்தம் ஆகும்.
தமிழ் மக்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றுகின்றார் என்று சிறிதரன் எம். பி அடங்கலாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பலரும் திடீரென்று நித்திரையால் எழுந்தவர்கள் போல ஆங்காங்கு தமிழ் மக்கள் முன்னிலையில் கருத்துகளை அண்மைய வாரங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிவஞானம் சிறிதரன் போன்றோருக்கு ஏற்பட்டு உள்ள சுடலை ஞானத்துக்கு வர உள்ள தேர்தலே காரணம் ஆகும். தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கம் விடுவிக்காவிட்டால் பட்ஜெட்டுக்கு ஆதரிக்க மாட்டார்கள் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இவர்கள் வாக்குறுதி வழங்கி உள்ளனர். வாக்கு வங்கிக்காக இவ்வாறான கருத்துகளை இவர்கள் வெளியிட்டு வருகின்றனரே ஒழிய மாற்றமாக எதுவும் நடக்க போவதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த அரசியல் நெருக்கடி காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்காவிட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலமாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும், விமோசனமும் சாத்தியப்பட்டு இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும். ஏனென்றால் அப்போது அமைச்சராக இருந்த வாசுதேவ நாணயகார ஜனாதிபதியின் ஆசியுடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருந்தார். இதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயார் செய்து இருந்தார். இவர்களின் விடுதலை வெகுவிரைவில் இடம்பெறும் என்று வளத்தாப்பிட்டியில் பகிரங்கமாக தெரிவித்தும் இருந்தார். வியாழேந்திரன், அங்கயன், மஸ்தான் ஆகியோர் இவர்களுக்கான விடுதலையை பெற்று கொடுக்க உரிய அக்கறையுடன் செயற்பட்டு இருந்தனர். ஆனால் வெண்ணெய் திரண்டு வருகின்ற நேரத்தில் தாழி உடைந்து விட்டது.