இராஜாங்க அமைச்சர் ஹரீஸினால் அக்கரைப்பற்று பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் சனிக்கிழமை (26) கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல். தவம் தலைமையில் அவரது அக்கரைப்பற்று இல்லத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்டு அவரது பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்று மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்று மைதான அபிவிருத்தி மற்றும் கம்பெரலிய வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தானும், மேலும் பல அபிவிருத்திகளுக்கு தலைவர் ரவூப் ஹக்கீமும் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படாமல் அந்நிதிகள் திருப்பப்பட்டிருந்தமை கவலையளிப்பதாகவும் மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ள கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் அபிவிருத்திகளுக்கு முன்னுரிமைப்படுத்தி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்ததோடு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களின் பெயர்ப் பட்டியலை விரைவாக தயாரித்து வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அகலமான வீதிகளை காபர்ட் வீதிகளாகவும் உள்ளக வீதிகளை கொங்றீட் வீதிகளாகவும் மாகாண சபைகள் மற்றும் ஊள்ளூராட்சி அமைச்சின் ஊடக புனரமைப்புச் செய்ய முடியுமெனவும், அவற்றுக்கான முன்மொழிவுகளை வழங்குமாறும் வேண்டின் கொண்டார்.
அத்தோடு திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டிற்கான வாகனங்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வழங்க முடியுமெனவும் குறிப்பிட்டார்.
மேலும் இதன்போது அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு நிரந்தர செயலாளர் ஒருவரை நியமித்துத் தருமாறு கோரப்பட்டமைக்கு அமைவாக அதற்கான நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.